ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை: பொருளாதாரத்தை சீரமைத்தது...

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் சீரமைக்கப்பட்டது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை: பொருளாதாரத்தை சீரமைத்தது...

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் சீரமைக்கப்பட்டது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தனது முகநூல் (ஃபேஸ்புக்) பக்கத்தில் அவர் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
 கடந்த மே 2014-ஆம் ஆண்டு நமது நாட்டில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 3.8 கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் இது 6.86 கோடியாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் பயனாகவே வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
 மத்திய அரசு மேற்கொண்ட இந்த சிறப்பான நடவடிக்கை மூலம்தான்அரசின் வரி வருவாய் அதிகரித்தது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களின் நலத் திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் அதிக அளவில் நிதி ஒதுக்க முடிகிறது. ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்ததே ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைதான்.
 பழைய ரூபாய் நோட்டுகள் பெரும்பாலும் வங்கிக்கு திரும்பிவிட்டதை வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மக்களிடம் இருக்கும் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்பது ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் நோக்கமல்ல. வருமான வரி செலுத்தும் அளவுக்கு பணம் சம்பாதிப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும் என்பதை உணர வைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம். மேலும், இந்த நடவடிக்கை மூலம் ரொக்கப் பரிமாற்றம் குறைந்து டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் நடைபெறுவது அதிகரித்துள்ளது என்று ஜேட்லி கூறியுள்ளார்.
 மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மேற்கொண்டபோது ரூ.15.41 லட்சம் கோடி மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதில் ரூ.15.31 லட்சம் கோடி, அதாவது 99.3 சதவீத நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பி வந்துவிட்டன. ரூ.10,720 கோடி மட்டுமே திரும்ப வரவில்லை. மேலும், ரூபாய் நோட்டு வாபஸ் காலகட்டத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேலும் பணத்தை டெபாசிட் செய்தவர்களிடம் அந்தப் பணம் எப்படி வந்தது என்பது குறித்து வருமான வரித் துறை நோட்டீஸ் மூலம் விளக்கம் கேட்கப்பட்டது.

பொருளாதாரத்தை சீர்குலைத்தது...

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு (2016 நவம்பர் 8) இரண்டு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், "இது பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்திய தினம். இதனால் பாதிப்புகளே அதிகம்' என்று விமர்சித்துள்ளார்.
 ரூபாய் நோட்டு வாபஸ் எனும் மோசமான நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளும், மோசமான விளைவுகளும் இப்போதும் நம்மை தொடர்ந்து பாதித்து வருகின்றன. நாட்டில் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய தினம் இது. தங்களது இந்த நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 காலம்தான் அனைத்துக் காயங்களையும் ஆற்றும் சிறந்த மருந்து என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், அதனையே பொய்யாக்கும் வகையில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் ஏற்பட்ட காயங்களும், வலிகளும் இப்போதும் தொடர்கின்றன. வயது, பாலினம், மதம், தொழில், வேலை என எந்த வேறுபாடும் இன்றி சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை பாதித்து வருகிறது.
 இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு இப்போது வரை தொடர்ந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு கையாளக் கூடாது என்பதற்கு இப்போதைய மத்திய அரசின் செயல்பாடுகள் உதாரணமாக உள்ளன என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
 ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் பாதிப்புகளை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் வெள்ளிக்கிழமை (நவ.9) நாடு தழுவிய அளவில் போராட்டத்தையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தனது நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
 மம்தா கண்டனம்: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் பாதிப்புகளை விமர்சித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது மிகப்பெரிய தவறு என்று சாமானிய மக்கள் முதல் பொருளாதார நிபுணர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் இப்போது ஒத்துக் கொள்கிறார்கள். நாட்டில் இருண்ட காலத்தை ஏற்படுத்திய மத்திய அரசு தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

திட்டமிட்ட சதி

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை திட்டமிட்ட சதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
 மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் இரண்டாவது ஆண்டு தினத்தையொட்டி, ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
 மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை நன்கு திட்டமிட்ட சதியாகும். பிரதமரின் வசதிபடைத்த நண்பர்கள், தங்களது கருப்புப் பணத்தை வெள்ளையாக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் புத்திசாலித்தனமாகக் கொண்டுவரப்பட்ட திட்டம், இது. இந்த ஊழலைப் பற்றி தெரியாதது ஒன்றுமில்லை.
 ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு வேறு ஏதேனும் விளக்கம் கூறினால், அது, இந்த தேசத்தை அவமதிக்கும் செயலாகும் என்று ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 மிகப்பெரிய ஊழல்: இதனிடையே, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறினார். இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
 ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, மிகப்பெரிய பண மோசடி திட்டமாகும். வங்கிகளின் வாராக்கடன் சுமை அதிகரித்து விட்டது. வங்கிகள் தடுமாறி வருகின்றன. இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கியை கையகப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் இரண்டாவது ஆண்டு தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.
 பாஜக கேள்வி: இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள ஊழலுக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையையும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com