ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நான் பொய் கூறவில்லை: டஸால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராப்பியர்   

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நான் பொய் கூறவில்லை என்று பிரான்சின் டஸால்ட் நிறுவன தலைமைச்  செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார். 
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நான் பொய் கூறவில்லை: டஸால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராப்பியர்   

புது தில்லி: ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நான் பொய் கூறவில்லை என்று பிரான்சின் டஸால்ட் நிறுவன தலைமைச்  செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார். 

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பிரான்ஸிடம் இருந்து 126 ரஃபேல் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதில், 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் இந்தியாவுக்கு வழங்குவது என்றும், எஞ்சிய 108 விமானங்களை பிரான்ஸின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவில்லை.

அதன் பிறகு, ஆட்சிக்கு வந்த மத்திய பாஜக கூட்டணி அரசு, பிரான்ஸிடம் இருந்து பறக்கும் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும், போர் விமானங்களின் உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில், பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

முன்னதாக ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்றும், டசால்ட் நிறுவன ஆவணங்களில் இந்த தகவல் உள்ளதாக பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியா பார்ட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் மீடியா பார்ட் பத்திரிகை வெளியிட்ட தகவலுக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது. அதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக சுதந்திரமாகவே தேர்வு செய்தோம். பங்குதாரர் விவகாரத்தில் எங்களுக்கு எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை என்று விளக்கமளித்திருந்தது. 

இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நான் பொய் கூறவில்லை என்று பிரான்சின் டஸால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:

ரஃபேல் போர் விமானங்களை டசால்ட்  நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தவிர மேலும் 30 நிறுவனங்கள் இதில் பங்குதாரராக உள்ளன. ஒப்பந்தப்படி தயாரிப்பில் 40 சதவீதத்தை அந்த  நிறுவனங்கள் நிறைவு செய்கின்றன. 40 சதவீதத்தில் 10 சதவீதம் மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு ஆகும்.

இந்தியாவிற்கு ரஃபேல் விமானம் சப்ளை செய்யும் விஷயத்தில் நான் பொய் கூறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நான் கூறிய கருத்துக்களும்,  வெளியிட்ட அறிக்கைகளும் உண்மையானவை. பொய் கூறும் பழக்கம் எனக்கு இல்லை. அதுவும் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் நான் பொய் கூற மாட்டேன். 

டஸால்ட் நிறுவனத்தின் பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது எங்கள் நிறுவனத்தின் முடிவு தான். 

1953 ஆம் ஆண்டு   நேருவின் ஆட்சிக் காலத்திலேயே எங்கள் நிறுவனம் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது. அதன் பிறகும் கூட அடுத்தடுத்த பிரதமர்கள் பதவியில் இருந்தபோது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு  கட்சிக்காகவும் நாங்கள் பணியாற்றவில்லை. 

ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணத்தை நாங்கள் பயன்படுத்தவில்லை. இது ஒரு கூட்டு முயற்சியாகும். அந்த கூட்டு நிறுவனத்துக்கு மட்டுமே பணம் சென்றது. அரசுகளுக்கு இடையேயான நேரடி விவகாரம் என்பதாலேயே, பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com