சத்தீஸ்கரில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது! 

சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில், 2-ஆவது மற்றும் இறுதிக்கட்டமாக 72 தொகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (நவ.20) வாக்குப்பதிவு தொடங்கி
சத்தீஸ்கரில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது! 

சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில், 2-ஆவது மற்றும் இறுதிக்கட்டமாக 72 தொகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (நவ.20) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசின் பதவிக்காலம் டிசம்பரில் நிறைவடைவதையொட்டி, அந்த மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 90 தொகுதிகளை உள்ளடக்கிய அந்த மாநிலத்தில், இருகட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளில் கடந்த 12-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.28 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக மாநிலத்தின் 19 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (நவ.20) 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் 1,53,85,983 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இவர்களில் 77,46,628 பேர் ஆண்கள்; 76,38,418 பேர் பெண்கள். 940 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

2-ஆம் கட்ட தேர்தலுக்காக மொத்தம் 19,296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மத்திய படையினர், காவல்துறையினர் என சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நக்ஸல் பாதிப்பு உள்ள ஜஷ்பூர், பல்ராம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

72 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 72 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,079 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மாநில அமைச்சர்கள் 10 பேர், முன்னாள் முதல்வரும், "ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்' கட்சியின் தலைவருமான  அஜீத் ஜோகி (மர்வாஹி தொகுதி), அவரது மனைவி ரேணு ஜோகி (கோண்டா தொகுதி), மருமகள் ரிச்சா ஜோகி (அகல்டாரா தொகுதி), காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரண்தாஸ் மஹந்த் (சக்தி தொகுதி), அக்கட்சியின் மாநிலத் தலைவர் பூபேஷ் பக்ஹெல் (படான் தொகுதி) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், முதல்வராக சரண்தாஸ் மஹந்த் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. 

கடந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே 49, 39 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com