நான் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்: ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் தகவல் 

நான் எப்போது வேண்டுமானாலும் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்று ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 
நான் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்: ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் தகவல் 

ஜம்மு:  நான் எப்போது வேண்டுமானாலும் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்று ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி, ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க கடந்த வாரம் உரிமை கோரினார்.அவருக்கு ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. அதேநேரம், 2 எம்எல்ஏக்களை மட்டும் கொண்டிருந்த மக்கள் மாநாட்டு கட்சியின் சஜ்ஜத் லோனே, பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.

யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று நாடே எதிர்பார்த்திருந்த வேளையில், சட்டப்பேரவையைக் கலைத்து சத்யபால் மாலிக் கடந்த 21-ஆம் தேதி உத்தரவிட்டார். 

அதனையடுத்து மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள ஐடிஎம்  பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சத்யபால் மாலிக் பேசியதாவது:

மெஹபூபா முஃப்தி ஆட்சி அமைக்க உரிமை கோரிய தினம், பண்டிகை தினமாகும். அன்றைய தினம் ஃபேக்ஸ் இயந்திரம் வாயிலாக ஆட்சி அமைக்க உரிமை கோரி அவர் கடிதம் அனுப்பினார். அவர்கள், என்னை அந்த இயந்திரத்தின் அருகில் எப்போதும் இருப்பேன் என்று கருதிவிட்டார்களா என்று தெரியவில்லை.

மெஹபூபாவும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லாவும் இணைந்து ஆட்சி அமைப்பதில் முனைப்புடன் இருந்திருந்தால், முன்னரே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

சட்டப் பேரவை கலைக்கப்பட்டதும், ஒமர் அப்துல்லாவும், மெஹபூபாவும் இதுதான் எங்களுக்கு தேவை என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தில்லியிலிருந்து அன்றைய தினம் நான் காஷ்மீர் வந்ததும், உளவுத் துறை அதிகாரிகள் நிலவரத்தை என்னிடம் எடுத்துரைத்தனர். அதை தீவிரமாக பரிசீலித்த நான், எனக்கு அளிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டு பேரவையைக் கலைக்கும் முடிவை எடுத்தேன். 

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை. பேரவையைக் கலைப்பதற்கு முன்பு, ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துபடி, பேரவையைக் கலைப்பதற்கு முன்பு, குடியரசுத் தலைவரிடமோ, நாடாளுமன்றத்திடமோ நான் முன் அனுமதி பெற வேண்டியதில்லை.

மத்திய அரசின் விருப்பத்தின்படி சஜ்ஜத் லோனேவை முதல்வராக்கியிருந்தால், நேர்மையற்ற மனிதராக வரலாற்றில் இடம்பெற்றிருப்பேன். என்னை தவறாக நினைத்தாலும் கவலையில்லை. நான் செய்தது சரி என்றே கருதுகிறேன்.

சஜ்ஜத் லோனே வாட்ஸ் அப்பிலும், மெஹபூபா ட்விட்டரிலும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.  இதுபோன்ற சமூக வலைதளங்களிலா உரிமை கோருவது? 

இவ்வாறு சத்யபால் மாலிக் அந்நிகழ்வில் பேசியிருந்தார். 

அதனையடுத்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து, இந்த விஷயத்தில்மத்திய அரசு எந்த விதமான அழுத்தமும் கொடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியாகியது. 

இந்நிலையில் நான் எப்போது வேண்டுமானாலும் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்று ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 

ஜம்முவில் மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் கிரிதாரி லால் தோக்ராவின் நினைவு நாள் புதனன்று அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியதாவது:

நான் எவ்வளவு நாள் இங்கு இருக்கிறேனோ, அதுவரை இருப்பேன். அது என்னுடைய கையில் இல்லை. ஆனால் பதவியிலிருந்து மாற்றப்படக் கூடிய அபாயம் உள்ளது. 

எப்போது நான் இங்கிருந்து மாற்றப்படுவேன் என்று தெரியவில்லை. நான் என்னுடைய வேலையை இழக்கவில்லை. ஆனால் நான் எவ்வளவு நாள் இங்கு இருக்கிறேனோ, அதுவரை நீங்கள் அழைத்தால் நான் வருவேன் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். 

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com