பிரதமர் பதிலளிக்கவில்லை என்றால் ராஜிநாமா செய்யவேண்டும்: ரஃபேல் விவகாரம் குறித்து ராகுல்

ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தும், அவர் மௌனம் காக்கிறார். அவர் பதிலளிக்கவில்லை என்றால் ராஜிநாமா செய்யவேண்டும் என்று ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார். 
பிரதமர் பதிலளிக்கவில்லை என்றால் ராஜிநாமா செய்யவேண்டும்: ரஃபேல் விவகாரம் குறித்து ராகுல்

ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தும், அவர் மௌனம் காக்கிறார். அவர் பதிலளிக்கவில்லை என்றால் ராஜிநாமா செய்யவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை காட்டமாக பேசினார். 

பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. 

இந்த பிரச்னை இந்தியாவில் வலுவடைந்து வந்த நேரத்தில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்டே, 'ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே பரிந்துரைத்தது, அதனால் எங்களுக்கு வேறு வழியில்லை' என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார். இது பாஜகவுக்கு கடுமையான நெருக்கடியாக அமைந்தது. 

இதைத்தொடர்ந்து, ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்கும் டஸால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்கள் தான் தேர்ந்தெடுத்தோம் என்று மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. 

இருப்பினும், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், ஆளும் மத்திய அரசும் அதனை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை சந்தித்து வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை வைத்தனர். மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியிடம் (சிஏஜி) ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு நடத்தி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இரண்டு முறை வலியுறுத்தியுள்ளனர்.   

இதற்கிடையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு தற்போது அது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. 

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் இப்படி அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்திக்க வியாழக்கிழமை அதில் புதிய சர்ச்சை எழுந்தது. 

'மீடியா பார்ட்' எனும்  பிரான்ஸ் நாட்டின் இணையதளம் செய்தி நிறுவனம், ரஃபேல் ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் மட்டும் தான் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது என்று புதன்கிழமை வெளியிட்டது. 

இந்த செய்தி நிறுவனத்தின்படி, ரஃபேல் போர் விமான கொள்முதலை சரிகட்டுவதற்காக இந்த தனியார் நிறுவனம் (ரிலையன்ஸ் டிஃபென்ஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று டஸால்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி லோய்க் செகாலென் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ரஃபேல் ஒப்பந்த சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை எந்தவித அழுத்தமும் இல்லாமல் தான் தேர்ந்தெடுத்தோம் என்று டஸால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. 

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 

"இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி. ஊழல் குற்றச்சாட்டுகள் நேரடியாக பிரதமர் மீது வைக்கப்படுகிறது. ஆனால், அவர் மௌனம் காக்கிறார். அவர் பதிலளிக்கவில்லை என்றால் ராஜிநாமா செய்யவேண்டும். பிரதமர் மோடி எதை சரிகட்ட வேண்டும்?    

முன்னதாக, இந்த ஒப்பந்தத்தின் பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் தான் தேர்தெடுக்கப்படவேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக முன்னாள் பிரான்ஸ் அதிபர் தெரிவித்தார். தற்போது, டஸால்ட் நிறுவனத்தில் 2-ஆவது உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரியும் அதே விஷயத்தை சொல்கிறார். 

இந்தியாவின் பிரதமர் ஊழல்வாதி என்பதை பிரான்ஸ் முன்னாள் அதிபர் எந்தவிதத்திலும் குறையாமல் சொல்லியிருந்தார். தற்போது, இந்த ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனத்தின் உயர்ந்த அதிகாரியும் இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி என்று சொல்கிறார். 

இந்த போர் விமானத்தின் தயாரிப்பாளர் மிகப் பெரிய ஒப்பந்தத்தில் இணைந்திருக்கிறார். அதனால், இந்திய அரசு எதை கூற வேண்டும் என்று நினைக்கிறதோ அதனை தான் அந்த நிறுவனமும் தெரிவிக்கும். 

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் பிரான்ஸ் செல்கிறார். இதைவிட மிகத் தெளிவான செய்தி வேறு என்னவாக இருக்க முடியும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com