மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கப்படும்: அமித்ஷா

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து நிச்சயம் விசாரிக்கப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து நிச்சயம் விசாரிக்கப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், பாஜகவில் சேர்வதற்கு முன் பல்வேறு இதழ்களில் ஆசிரியராகப் பொறுப்பு வகித்துள்ளார். அந்தக் காலக்கட்டத்தில் தங்களுக்கு எம்.ஜே.அக்பர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று சில பெண் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாலியல் தொந்தரவுக்குள்ளான பெண்கள், தங்களுக்கு நேரிட்ட பாதிப்பை வெளிப்படுத்தும் மீ டூ (எனக்கும் கூட) பிரசாரத்தின் மூலம், எம்.ஜே.அக்பர் மீதான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதையடுத்து, அவர் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கைகள் வைத்து வருகின்றன. 

இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவிக்கையில்,

"இந்தக் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதை ஆராய வேண்டும். இந்தப் பதிவின் உண்மைத்தன்மையை அறியவேண்டும். அந்தப் பதிவை பதிவிட்ட நபர் யார் என்பதையும் அறியவேண்டும். எனது பெயரை பயன்படுத்தியும் பதிவிடலாம். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படும்" என்றார். 

முன்னதாக, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள்,

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி:

"இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் (எம்.ஜே.அக்பர்) பேச வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்தில் நான் உடனிருக்கவில்லை. பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்த பெண்கள் துணிவுடன் முன்வந்து தங்களுக்கு நேரிட்ட பாதிப்புகளைத் தெரிவிப்பதை வரவேற்கிறேன். இவ்வாறு புகார் தெரிவிப்பவர்களை விமர்சிக்கக் கூடாது; கேலி செய்யக் கூடாது. புகார் தெரிவிக்கும் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றார் அவர்.

பாஜக தேசிய பொதுச் செயலர் கைலாஷ் விஜயவரிகையா: 

"அமைச்சர் எம்.ஜே.அக்பர், மத்திய அரசில் அங்கம் வகிக்கிறார். அவர் பதவி விலகுவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும்" என்றார் அவர். 

மத்திய அமைச்சர் உமா பாரதி:

"இந்த சம்பவம் அவர் (அக்பர்) மத்திய அரசின் அங்கம் வகிக்காத போது நிகழ்ந்தது. அதனால், இது அந்த பெண்ணுக்கும், அக்பருக்கும் இடையிலான விஷயம். இதுதொடர்பாக அரசு சொல்வதற்கு எதுவும் இல்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com