எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் ஆலோசனை

பொதுத் துறை நிறுவனங்களான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), ஆயில் இந்தியா லிமிடெட் (ஓ.ஐ.எல்.) ஆகிய நிறுவனங்களின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை
எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் ஆலோசனை

பொதுத் துறை நிறுவனங்களான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), ஆயில் இந்தியா லிமிடெட் (ஓ.ஐ.எல்.) ஆகிய நிறுவனங்களின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
 பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டிலேயே எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வது குறித்தும், அவற்றின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
 இந்த நிலையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தலைவர் சசி சங்கர், ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் உப்தால் போரா ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும், தங்களது நிறுவனத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான உற்பத்தி இலக்கு குறித்த விவரங்களை பிரதமரிடம் விளக்கிக் கூறினர்.
 மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோலியத் துறைச் செயலர் எம்.எம்.குட்டி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 கடந்த 2013-14ஆம் நிதியாண்டில் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி தேவை 77 சதவீதமாக இருந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி தேவையை 66 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இறக்குமதி தேவையை பாதியாகக் குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 ஆனால், அதன் பிறகு எரிபொருள் இறக்குமதி மேலும் அதிகரித்தது. கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி தேவை 81.7 சதவீதமாக அதிகரித்தது. கடந்த நிதியாண்டில் (2017-18) இறக்குமதி தேவை 82.8 சதவீதமாக மேலும் அதிகரித்தது. நிகழ் நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் எரிபொருள் இறக்குமதி தேவை மேலும் அதிகரித்து 83.2 சதவீதமாக உள்ளது.
 உள்நாட்டில் கடந்த 2016-17ஆம் ஆண்டில் 3.6 கோடி டன்னாக இருந்த கச்சா எண்ணெய் உற்பத்தி, 2017-18ஆம் ஆண்டில் 3.5 கோடி டன்னாகக் குறைந்து விட்டது.
 இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில், உள்நாட்டிலேயே அதன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மோடி அறிவுறுத்தினார். மேலும், கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் போன்ற உயிரி எரிபொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 வங்காள விரிகுடா அருகே கிருஷ்ணா - கோதாவரி படுகையில் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் தொடங்கவுள்ளது. அந்த நிறுவனம், அடுத்த ஆண்டு டிசம்பரில் இயற்கை எரிவாயுவையும், 2021-ஆண்டில் கச்சா எண்ணெய்யையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 எண்ணெய் வள ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகள், முதலீட்டாளர்களுக்கு உகந்த வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால், கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் பல நிறுவனங்கள் ஆர்வமுடன் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, உள்நாட்டில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உற்பத்தி அதிகரிக்கும் என்று அரசு நம்பிக்கையுடன் உள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com