சபரிமலை தீர்ப்புக்கு எதிராக பந்தளம் அரச குடும்பத்தினர் போராட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக பந்தளம் அரச குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலை தீர்ப்புக்கு எதிராக பந்தளம் அரச குடும்பத்தினர் போராட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக பந்தளம் அரச குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைமைச் செயலகம் முன்பாக அந்தப் போராட்டம் நடைபெற்றது.
 பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, ஐயப்பன் கோயில் நகைகளை நிர்வகிக்கும் உரிமை உடையவர்களாவர். கோயிலின் நம்பிக்கை மற்றும் மரபுகளை காக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எஸ்.சிவக்குமார், பந்தளம் சுதாகரன், நடிகரும், பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 அரச குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமார வர்மா பேசுகையில், ""ஐயப்பன் கோயில் நம்பிக்கைகளையும், மரபுகளையும், நீதிமன்றத்தின் ஒற்றைத் தீர்ப்பால் தகர்த்து விட முடியாது. இருப்பினும், சபரிமலை கோயிலின் நம்பிக்கையை மட்டும் கேள்விக்குள்ளாக்கும் முயற்சிகள் ஏன் நடைபெறுகின்றன. இந்தக் கோயில் புகழ் பெற்றதாக இருப்பதினால் அதுபோன்ற முயற்சி நடைபெறுகிறதா?'' என்றார்.
 காங்கிரஸ் போராட்டம்: இதேபோன்று, காங்கிரஸ் கட்சி சார்பாக பெண்கள் உள்பட ஏராளமான நிர்வாகிகள், சபரிமலை கோயிலை நிர்வாகம் செய்து வரும் தேவஸ்ஸம் போர்டை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "சபரிமலை கோயிலை காப்போம்' என அவர்கள் முழக்கமிட்டனர்.
 அந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் கே.முரளீதரன், "ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.
 இந்த விவகாரத்தில் பாஜகவை குற்றம்சாட்டி பேசிய அவர், கோயில் நம்பிக்கை மற்றும் மரபுகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று தெரிவித்தார்.
 பாஜக பேரணி: இதற்கிடையே, சபரிமலையை பாதுகாப்போம் என்ற இலக்குடன் பேரணியாகச் செல்லும் பாஜகவினர் வெள்ளிக்கிழமை கொல்லம் மாவட்டத்தை கடந்து சென்றனர். அந்தப் பேரணி, மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் வரும் 15-ஆம் தேதி நிறைவுபெறவுள்ளது.
 பேரணியின்போது, மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பேசுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முயற்சிக்கும் இடதுசாரி கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
 அவர் மேலும் கூறுகையில், ""பாஜக எப்போதும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக இருக்கும். அதில் சமரசம் கிடையாது. கேரளம் மட்டுமல்லாமல் பிற தென் மாநிலங்களிலும் போராட்டத்தை தீவிரமாக்க திட்டமிட்டுள்ளோம். பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்'' என்றார்.
 பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருவேறு போராட்டக் குழுவினர் நடத்தி வரும் போராட்டங்கள் வெள்ளிக்கிழமை ஐந்தாம் நாளாக நீடித்தன.
 அதே சமயம், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்பதில் கேரள அரசு உறுதியாக உள்ளது. அரசை சீர்குலைப்பதற்காகவே இத்தகைய போராட்டங்கள் நடைபெறுவதாகவும் ஆளும் இடதுசாரி முன்னணி குற்றம்சாட்டி வருகிறது.
 இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com