சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூருக்கு புதிதாக ஆவணங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவு

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்களை அவரது கணவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூருக்கு மீண்டும் புதிதாக வழங்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்களை அவரது கணவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூருக்கு மீண்டும் புதிதாக வழங்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
 முன்னதாக, சசி தரூர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விகாஸ் பவா, வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட மின்னணு ஆதாரங்களில் சில தெளிவாக இல்லை என்று கூறினார். இதையடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை சசி தரூர் தரப்புக்கு மீண்டும் வழங்குமாறு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சமர் விஷால் உத்தரவிட்டார்.
 அதன்படி, சம்பந்தப்பட்ட மின்னணு ஆதாரங்கள் புதிதாக வழங்கப்படும் என்று காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் அதுல் ஸ்ரீவாஸ்தவா கூறினார். பின்னர் வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 முன்னதாக, சசி தரூர் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகலை அவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் காவல்துறை தரப்பிலிருந்து சசி தரூருக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தன.
 கடந்த 2014 ஜனவரி 17-ஆம் தேதி சுனந்தா புஷ்கர் தில்லியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றின் அறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டறியப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக அவரது கணவரும், திருவனனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com