தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல் துறை நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல் துறை நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்துள்ளது.
 சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் அக்டோபர் 8-ஆம் தேதி சிபிஐக்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் இயங்கிவரும் சிபிஐ புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பாக புதிதாக 12 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் புகார்தாரராக தூத்துக்குடி சிறப்பு வட்டாட்சியர் (தேர்தல்) பி.சேகர் சேர்க்கப்பட்டுள்ளார்.
 இதில் சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், வன்முறையில் ஈடுபடுதல், அரசு சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், கொலை முயற்சியில் ஈடுபடுதல், பெட்ரோல் குண்டு வீசுதல், கொடுமையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், வீடுகளை சேதப்படுத்துதல், இயற்கைக்கு மாறான மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 மேல்முறையீடு: இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை தமிழக காவல் துறையின் சிபிசிஐடி பிரிவே தொடர்ந்து மேற்கொள்ள உத்தரட வேண்டும் என கோரப்பட்டுள்ள இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com