ம.பி., ராஜஸ்தானில் போலி வாக்காளர்கள்? காங்கிரஸ் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
 மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 28-ஆம் தேதியும், ராஜஸ்தானில் டிசம்பர் 7-ஆம் தேதியும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸýக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில், மத்தியப் பிரதேசத்தில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், ராஜஸ்தானில் 41 லட்சத்துக்கும் மேல் போலி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி காங்கிரஸ் தலைவர்கள் கமல் நாத், சச்சின் பைலட் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 அதில், தேர்தலில் இதுபோன்ற முறைகேடுகளைக் களைந்து நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் "பிடிஎஃப்' வடிவில் வெளியிடாமல், தேர்தல் ஆணைய இணையதளத்தில் சென்று வாக்காளர்களின் பெயரைத் தேடித் தெரிந்து கொள்ள வசதியாக "டெக்ஸ்ட்' வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
 இது தவிர தேர்தலில் பயன்படுத்தப்பட இருக்கும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
 இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. அதில், தேர்தல் ஆணைய விதிகளின்படி, அதன் இணையதளத்தில் "பிடிஎஃப்' வடிவில் மட்டுமே வாக்காளர் பட்டியலை வெளியிட முடியும். மனுதாரர்கள் கோருவது போல வெளியிட விதிகளில் இடமில்லை. மேலும், வாக்காளர் பட்டியலை எப்படி வெளியிட வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. மேலும், கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் நம்பிக்கைக்குரிய வகையில் தேர்தல்களை நடத்தி வந்துள்ளது. தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதாக ஆணையம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது என்று கூறிய நீதிபதிகள், அந்த மனுக்களை நிராகரித்தனர்.
 முன்னதாக, இந்த மனுக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்த போது, காங்கிரஸ் தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய தேர்தல் ஆணையமும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் ஆணையங்களும் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 இதையடுத்து, போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் கட்சியினர் களங்கம் சுமத்த முயற்சிக்கின்றனர் என்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற மறுவிசாரணையின்போது இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, அப்போது தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதிகள் காங்கிரஸின் மனுக்களை நிராகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com