மேற்கு வங்கத்தில் மையம் கொண்ட "டிட்லி' புயல்: ஒடிஸாவில் 60 லட்சம் பேர் பாதிப்பு

வங்கக் கடலில் உருவான "டிட்லி' புயல், வலுவிழந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்கஎ, மேற்கு வங்க மாநிலத்தில் மையம் கொண்டதால், அங்கு இடைவிடாது மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

வங்கக் கடலில் உருவான "டிட்லி' புயல், வலுவிழந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்கஎ, மேற்கு வங்க மாநிலத்தில் மையம் கொண்டதால், அங்கு இடைவிடாது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை(அக்.13) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அளித்த அறிக்கையில், புயல் வலுவிழந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும், மாநிலத்தின் ஹெüரா, ஹுக்ளி, பர்த்வான் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கொல்கத்தா, மால்டா, தினாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை வரை கனமழை நீடிக்கும். மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடலோரப் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 ஒடிஸாவில் வெள்ளம்: "டிட்லி' புயலால் ஒடிஸா மாநிலத்தில் கடந்த 3 நாள்களாக பெய்த வந்த பலத்த மழையால் மாநிலத்தின் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் 3 மாவட்டங்களில் உள்ள 60 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 4 பேர் பலி: புயல் மற்றும் கனமழை காரணமாக நேரிட்ட விபத்துகளால் ஒடிஸாவில் 3 பேரும், மேற்கு வங்கத்தில் ஒருவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
 தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுவதால், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கஞ்சம், கஜபதி, ராய்காடா, பாலசோர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
 இதுகுறித்து சிறப்பு நிவாரண குழு ஆணையர் பி.பி. சேத்தி கூறுகையில், கடந்த இரு நாள்களாக பலத்த காற்று வீசியதால், ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும், மரங்களும் வீழ்ந்தன. அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் 16-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கஞ்சம் மாவட்டத்தில் உள்ள 125 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மீட்பு பணி மற்றும் நிவாரணப் பொருள்களைக் கொண்டு சேர்ப்பதற்காக கடற்படையிடம் இருந்து இரு ஹெலிகாப்டர்கள் பெறப்பட்டன. முதல்வர் நவீன் பட்நாயக்கின் அறிவுறுத்தலின்படி, மாநிலத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு பணிகளை மேற்பார்வையிட 3 பேர் அடங்கிய அமைச்சகக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com