வெளி மாநிலத்தவர்களுக்கு எதிரான வன்முறை: குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

ஹிந்தி பேசும் வெளி மாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களால் குஜராத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது; எனவே அங்கு பாஜக ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை

ஹிந்தி பேசும் வெளி மாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களால் குஜராத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது; எனவே அங்கு பாஜக ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 குஜராத்தில் ஒரு குழந்தையை பிகாரைச் சேர்ந்த தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அந்த மாநிலத்தின் 6 மாவட்டங்களில் ஹிந்தி பேசும் வட மாநிலத்தவருக்கு எதிராக வன்முறை வெடித்தது. பல இடங்களில் வட மாநிலத்தவர் தாக்கப்பட்டனர். இதையடுத்து, அங்கிருந்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் வெளியேறியுள்ளனர். இதனால், மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
 இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோகில் இது தொடர்பாக கூறியதாவது:
 குஜராத்தில் வட இந்தியர்களுக்கு எதிராக நடைபெறும் கலவரத்தின் பின்னணியில் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் உள்ளனர். இந்த கலவரத்தின் பின்னணியில் பாஜகவின் சதி உள்ளது. இதுபோன்ற வன்முறைகளை எந்த குஜராத்தியும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
 பிரதமர் மோடி குஜராத்தைச் சேர்ந்தவர். ஆனால், அவர் ஹிந்தி பேசும் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மோடியின் தேர்தல் வெற்றியில் உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலத்தவரின் பங்கும் அதிகம் உள்ளது. எனவே, அவர் ஹிந்தி பேசும் மக்களுக்கும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். குஜராத்தில் வட இந்தியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத மாநில முதல்வர் விஜய் ரூபானியை உடனடியாக பதவி நீக்க வேண்டும்.
 வட இந்தியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக குஜராத்தில் காவல் நிலையத்தில் இதுவரை 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியுள்ளது என்று தெரியவந்துள்ளது. இவ்வளவு மோசமான அரசைக் கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வரும் பாஜக எம்எல்ஏக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com