3-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: ஜம்மு 82%, காஷ்மீர் 3.49% வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 3-ஆம் கட்ட தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
3-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: ஜம்மு 82%, காஷ்மீர் 3.49% வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 3-ஆம் கட்ட தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தீவிரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3.49 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக, ஜம்முவில் உள்ள சம்பா மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
 ஸ்ரீநகர் மாநகராட்சிக்கு உள்பட்ட 20 வார்டுகளில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 1.84 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. சஃபகடல், சனாபோரா, சிவில் லைன்ஸ் ஆகிய வார்டுகளில் தலா 10 வாக்குகள் கூட பதிவாகவில்லை.
 காஷ்மீர் பள்ளத்தாக்கில் குறைந்த அளவு வாக்குகள் பதிவானபோதிலும், அங்குள்ள பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் மட்டும் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
 அனந்த்நாக் மாநகராட்சிக்கு உள்பட்ட ஷீர்போரா வார்டில் 1.39 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அநத வார்டில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 151 வார்டுகளில் மூன்றாம் கட்ட தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அவற்றில், 49 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 62 வார்டுகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
 இதனால், 40 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 3.49 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. சம்பா மாவட்டத்தில் 58 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
 சம்பா மாவட்டத்தில் மூன்றாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக முடிவடைந்தது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி சுஷ்மா செüஹான் கூறினார்.
 முழு அடைப்பு: இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க கோரி, காஷமீரின் பல்வேறு பகுதிகளில் பிரிவினைவாத அமைப்பினர் சனிக்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். தேர்தலையொட்டி முன்கூட்டியே சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
 எனினும், பிரிவினைவாதிகளின் போராட்டம் காரணமாக, ஸ்ரீநகரின் சில பகுதிகள் உள்பட பள்ளதாக்கில் பல்வேறு இடங்களில் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தேர்தல் நடைபெற்ற பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
 உமர் அப்துல்லா விமர்சனம்: இதனிடையே, ஜம்மு-காஷ்மர் மாநிலத்தை மத்திய அரசு சரிவர கையாளவில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.
 உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் குறைந்த அளவு வாக்குகள் பதிவானது ஏன்? என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com