ஒடிஸா: "டிட்லி' புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி

வங்கக் கடலில் உருவான "டிட்லி' புயலால் ஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரை காணவில்லை.
ஒடிஸா: "டிட்லி' புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி

வங்கக் கடலில் உருவான "டிட்லி' புயலால் ஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரை காணவில்லை.
 இதுகுறித்து சிறப்பு நிவாரண குழு ஆணையர் சேத்தி கூறுகையில், கஜபதி மாவட்டத்தில் உள்ள பரகாரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை கனமழை பெய்ததை அடுத்து அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொலைதூரத்தில் உள்ள பகுதி மற்றும் மரங்கள் வீழ்ந்ததில் சாலை போக்குவரத்து துண்டிப்பு ஆகிய காரணங்களால் மீட்பு பணி நடவடிக்கைகள் தாமதமாகியது. இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 4 பேரை காணவில்லை. அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அங்கு சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டார் என்று அவர் கூறினார்.
 இதனிடையே, மீட்பு பணி நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், கஞ்சம், கஜபதி, ராயகடா ஆகிய மாவட்டங்கள் இந்த புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அந்த மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதில் பாதிப்படைந்தனர். அந்த பகுதிகளில் நடைபெறும் மீட்பு பணி நடவடிக்கைகளை கண்காணிக்க 3 பேர்அடங்கிய அமைச்சகக் குழுவை முதல்வர் நவீன் பட்நாயக் அமைத்துள்ளார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள நீர் மெல்ல வடிந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் பார்வையிட்டார். 963 நிவாரண முகாம்களில் 1. 27 லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினர்.
 மாநிலத்தின் மத்திய மற்றும் தெற்கு பிரிவுகளின் கீழ் உள்ள அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தசரா விடுமுறையை அந்த மாநில அரசு ரத்து செய்துள்ளது.
 குழந்தைகளுக்கு "டிட்லி' பெயர்:
 ஒடிஸா மாநிலத்தில் "டிட்லி' புயல் கடுமையான சேதத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், புயல் கரையை கடந்த நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு "டிட்லி' என்று பெயர் சூட்டுவதில் தாய்மார்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். டிட்லி என்பதற்கு ஹிந்தி மொழியில் "பட்டாம்பூச்சி' என்று அர்த்தம்.
 கஞ்சம், ஜகத்சிங்பூர், நயகார் ஆகிய பகுதிகளில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு "டிட்லி' என்று பல குடும்பத்தினர் பெயர் சூட்டியுள்ளனர். சட்டர்பூரைச் சேர்ந்த பெண்மணிக்கு வியாழக்கிழமை காலை இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அவர்கள் இருவருக்கும் டிட்லி என்று பெயரிட உள்ளதாக அவர் கூறினார். அதேபோல, அஸ்காவில் உள்ள சுகாதார நிலையத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை 11 மணி வரை பிறந்த 9 பெண் குழந்தைகளுக்கு "டிட்லி' என்று பெயரிட உள்ளனர்.
 ஒடிஸா மாநிலத்தில் புயலின் பேரை குழந்தைகளுக்கு வைப்பது புதிதன்று. இதற்கு முன்னரும் 1999-ஆம் ஆண்டு சூப்பர் புயலின் போது 10,000 பேர் உயிரிழந்தனர். அந்த புயலின் பேரை குழந்தைகளுக்கு பெற்றோர் வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com