கேரளம்: "ஐயப்பன்' நாமத்தை உச்சரித்து பேரணி

சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து
கேரளம்: "ஐயப்பன்' நாமத்தை உச்சரித்து பேரணி

சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் "ஐயப்பன்' நாமத்தை உச்சரித்தபடி சனிக்கிழமை பேரணி நடத்தினர்.
 கேரளத்தின் வர்த்தக தலைநகராகக் கருதப்படும் கொச்சி நகரின் பரபரப்பு மிகுந்த சாலைகளில், ஐயப்ப மந்திரங்களை உச்சரித்தபடி பக்தர்கள் பேரணியாக வந்தனர். இதில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 ஐயப்பன் கோயிலில் கடைப்பிடிக்கப்படும் மரபுகளை காக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, கொச்சி நகரில் உள்ள பழைமை வாய்ந்த சிவன் கோயில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதேபோன்று எர்ணாகுளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலம் நடத்தினர். இதில், குருவாயூர் கோயிலின் தந்திரி தினேசன் நம்பூதிரிகள், பாஜக எம்.பி.யும் நடிகருமான சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
 கேரளத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக, தலைநகர் திருவனந்தபுரத்தை நோக்கி செல்லும் பாஜகவினரின் பேரணி சனிக்கிழமை கொல்லம் மாவட்டத்தை கடந்து சென்றது. அவர்கள் திங்கள்கிழமை திருவனந்தபுரம் சென்றடைவர்.
 இதேபோன்று, மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, தாணே, நவி மும்பை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதற்கிடையே, மாதாந்திர பூஜைக்காக ஐயப்பன் கோயில், வருகின்ற 17-ஆம் தேதி மாலையில் திறக்கப்படவுள்ளது.
 தற்கொலை மிரட்டல்: கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டால், அதை எதிர்த்து 7 நபர்கள் தற்கொலை செய்ய தயாராக இருக்கின்றனர் என்று சிவசேனை கட்சியின் கேரள மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து மாநில சிவசேனை தலைவர் பேரிங்கமாலா ஆஜி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ""எங்கள் கட்சியின் மகளிரணியினர் பம்பை நதி அருகே 17, 18 ஆகிய தேதிகளில் தயாராக இருப்பர். யாரேனும் இளம்வயது பெண், ஐயப்பன் கோயிலுக்குள் சென்றால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வர்''
 சபரிமலைக் கோயிலின் மரபுகளை காக்கும் நோக்கில் தற்கொலைப்படை தயாராகியிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com