சத்தீஸ்கர் மாநில அரசியலில் திருப்பம்: காங்கிரஸ் செயல் தலைவர் பாஜகவில் இணைந்தார்

சத்தீஸ்கர் மாநில அரசியலில் புதிய திருப்பமாக, மாநில காங்கிரஸ் செயல் தலைவர்களுள் ஒருவரான ராம் தயாள் உய்க் பாஜகவில் இணைந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில அரசியலில் திருப்பம்: காங்கிரஸ் செயல் தலைவர் பாஜகவில் இணைந்தார்

சத்தீஸ்கர் மாநில அரசியலில் புதிய திருப்பமாக, மாநில காங்கிரஸ் செயல் தலைவர்களுள் ஒருவரான ராம் தயாள் உய்க் பாஜகவில் இணைந்துள்ளார். இது காங்கிரஸுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 பிலாஸ்பூர் மாவட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் சனிக்கிழமை ராம் தயாள் கட்சியில் இணைந்தார். அப்போது முதல்வர் ரமண் சிங், மாநில பாஜக தலைவர் தரம்லால் கெüசிக் மற்றும் பல கட்சி பிரமுகர்களும் உடனிருந்தனர்.
 இது குறித்து, ராம் தயாள் உய்க் தெரிவித்ததாவது:
 காங்கிரஸ் கட்சி தற்போது மக்களுக்கான நலனில் கவனம் செலுத்துவதில் இருந்து விலகிச் சென்றுவிட்டது. முக்கியமாக, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் நலனை காங்கிரஸ் கருத்தில் கொள்வதில்லை.
 போலி சி.டி. விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி பல்வேறு அவப்பெயர்களை சம்பாதித்துவிட்டது. எனவே, இந்த விவகாரத்தில் சிறை சென்று வந்த மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேலை அப்பொறுப்பிலிருந்து நீக்க, காங்கிரஸ் தலைமைக்குக் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
 பழங்குடியின மக்களுள் ஒருவனான எனக்கும் அவர்கள் சரியான மரியாதை அளிப்பதில்லை' என்று அவர் தெரிவித்தார்.
 கருத்து வேறுபாடு: "கடந்த ஒரு மாதமாகவே, ராம் தயாளுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. மேலும், பழங்குடியினர்களின் கட்சியான கோண்டுவானா கணதந்திர கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு ராம் தயாள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
 இத்தோடு, கடந்த 3 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்ற பாலி-தனாகர் தொகுதியை, அப்பழங்குடியின கட்சிக்கு காங்கிரஸ் தலைமை ஒதுக்கியதையடுத்து, ராம் தயாள் இந்த முடிவை எடுத்துள்ளார்' என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 பலம்வாய்ந்த மாற்று வேட்பாளர்: "ராம் தயாளின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு சிறந்த ஆட்சியாளர்கள் இருக்கின்றனர்.
 கூடிய விரைவில், அவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு பலம்வாய்ந்த மாற்று வேட்பாளர் அடையாளம் காணப்படுவார்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் டி.எஸ்.சிங்தேவ் தெரிவித்தார்.
 ஏற்கெனவே, கடந்த 2000-ஆம் ஆண்டு, பாஜக கட்சியிலிருந்து விலகி, ராம் தயாள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 ராம் தயாள் பாஜகவில் இணைந்துள்ளது அக்கட்சிக்குப் பெரும் பலத்தையும், காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com