முலாயம் சிங் சகோதரருக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு: உ.பி. அரசு முடிவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில், மதச்சார்பற்ற சமாஜவாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் சகோதரருமான சிவபால் யாதவுக்கு "இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு அளிப்பது என மாநில அரசு முடிவு செய்த

உத்தரப் பிரதேச மாநிலத்தில், மதச்சார்பற்ற சமாஜவாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் சகோதரருமான சிவபால் யாதவுக்கு "இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு அளிப்பது என மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 அண்மையில், சிவபால் யாதவுக்கு அரசு இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது உயர் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 சமாஜவாதி கட்சியின் மீது சிவபால் யாதவுக்கு இருக்கும் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக்கும் வகையிலேயே மாநில பாஜக அரசு அவருக்கு சலுகைகள் வழங்கி வருவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
 உத்தரப் பிரதேச மாநிலத்தில் 6-ஆவது முறையாக எம்எல்ஏ-வாக பதவி வகித்து வருபவர் சிவபால் யாதவ். முலாயம் சிங்கின் சொந்த சகோதரான இவர், சமாஜவாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது மாநில அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
 கடந்த 2012-இல் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், மாநில முதல்வரான பிறகு, சிவபால் யாதவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தார். குறிப்பாக, சிவபால் யாதவை அமைச்சரவையில் இருந்து நீக்குவதும், சேர்ப்பதுமாக இருந்ததால், அவருக்கும், அகிலேஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது.
 இந்தச் சூழலில் 2017-இல் நடைபெற்ற தேர்தலில் சமாஜவாதி கட்சி தோல்வி அடைந்தது. பாஜக தலைமையில் புதிய அரசு அமைந்தது.
 அதன் பின்னர் சமாஜவாதி கட்சியில் இருந்து வெளியேறிய சிவபால் யாதவ், மதச்சார்பற்ற சமாஜவாதி கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
 அவருக்கு லால் பகதூர் சாஸ்திரி மார்கில் உள்ள 6-ஆம் எண் அரசு இல்லம் அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
 இதற்கிடையே, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சிவபால் யாதவ் கூறியதை உத்தரப் பிரதேச அரசு பரிசீலனை செய்தது. அதன்படி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 தற்சமயம் முன்னாள் முதல்வர்களான அகிலேஷ் யாதவ், முலாயம் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
 முன்னதாக, சிவபால் யாதவ் தனது கட்சியுடன் வந்து பாஜகவில் இணைய வேண்டும் என மாநில துணை முதல்வர் கேஷவ பிரசாத் மெüரியா அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com