ரஃபேல்: ஹெச்ஏஎல் நிறுவனத்தின் உரிமையை பறித்துவிட்டார் மோடி: ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

ரஃபேல் போர் விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான தார்மிக உரிமை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு (ஹெச்ஏஎல்) மட்டுமே உள்ளது என்று
ரஃபேல்: ஹெச்ஏஎல் நிறுவனத்தின் உரிமையை பறித்துவிட்டார் மோடி: ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

ரஃபேல் போர் விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான தார்மிக உரிமை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு (ஹெச்ஏஎல்) மட்டுமே உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அந்த உரிமையை பிரதமர் மோடி பறித்துவிட்டதாகவும், மத்திய அரசின் ஊழல் நடவடிக்கைகளால் பாரம்பரியமிக்க அந்நிறுவனம் படிப்படியாக அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் ஹெச்ஏஎல் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களிடம் ராகுல் காந்தி சனிக்கிழமை கலந்துரையாடியபோது இக்கருத்துகளைத் தெரிவித்தார்.
ரஃபேல் விவகாரத்தை முன்னிறுத்தி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடி வரும் ராகுல் காந்தி, தற்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்களை நேரடியாக சந்தித்துப் பேசியிருப்பது அவரது அரசியல் வியூகத்தின் அடுத்தகட்ட நகர்வாக கருதப்படுகிறது.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு இந்த விஷயத்தை அவர் தீவிரமாகக் கைகளில் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, அந்நாட்டின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான டஸால்ட் ஏவியேஷன் லிமிடெட்டிடம் இருந்து அவற்றை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே, ரஃபேல் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது. பிரதமருக்கு நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்த நிலையில், பெங்களூரில் ராகுல் காந்தி தலைமையில் ஹெச்ஏஎல் நிறுவனம் முன்பாக சனிக்கிழமை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொள்ளுமாறு ஹெச்ஏஎல் நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்று அந்த நிறுவனத்தின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதில் பங்கேற்றனர். அப்போது அவர்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்தே மக்களின் நலன் கேள்விக் குறியாகிவிட்டது. பொதுத் துறை நிறுவனங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. அவற்றை மேம்படுத்துவதற்கு பதிலாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வரிசையில் தற்போது ஹெச்ஏஎல் நிறுவனத்தை சிதைக்கும் செயல்களில் பிரதமர் மோடி அரசு இறங்கியுள்ளது. விமானத் துறையின் மிகப்பெரிய சொத்தாக இருப்பது ஹெச்ஏஎல் நிறுவனம்.
ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக விமான தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அந்நிறுவனத்துக்கு உரிய கெüரவம் அளிக்காமல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவமதித்து விட்டது. இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டின் நலன் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளவர்கள் கடுமையாக புண்பட்டுள்ளனர்.
ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு விமான தயாரிப்பில் போதிய அனுபவம் இல்லை என்பதால் அந்த ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியாயம் கற்பிக்கப் பார்க்கிறார். அவரது கூற்று எத்தனை அபத்தமானது? 78 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு இல்லாத அனுபவமா, சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அம்பானியின் நிறுவனத்துக்கு இருக்கப் போகிறது?
எந்த விதமான கடனும் இல்லாத ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இல்லாத ஆற்றலும், திறனுமா, ரூ.45 ஆயிரம் கோடி கடன் சுமையில் தவித்து வரும் அம்பானி நிறுவனத்திடம் இருக்கப் போகிறது?
பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவின் நவீன கால ஆலயங்கள் போன்றவை. அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ரஃபேல் விமான ஒப்பந்தத்தைப் பெறும் அனைத்து உரிமைகளும் உங்களுக்கு (ஹெச்ஏஎல் ஊழியர்கள்) உண்டு. அதை அம்பானிக்கு அளித்ததற்காக மத்திய அரசு ஒருபோதும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. ஆனால், அவர்களது சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார் ராகுல் காந்தி.






 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com