பிரியா ரமணி மீதான அவதூறு வழக்கு: எம்.ஜே.அக்பர் அக்.31 நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தன் மீது முதல் நபராக புகார் கூறிய பிரியா ரமணிக்கு எதிராக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அக்பர் அவதூறு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
பிரியா ரமணி மீதான அவதூறு வழக்கு: எம்.ஜே.அக்பர் அக்.31 நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் பத்திரிகையாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் (67), புதன்கிழமை தமது பதவியை ராஜிநாமா செய்தார். அக்பரின் ராஜிநாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். பின்னர், அது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் அவரது ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டார்.

பதவி விலகல் குறித்து எம்.ஜே.அக்பர் வெளியிட்ட அறிக்கையில், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை, நான் பதவி விலகிய பிறகு, தனி நபராக எதிர்கொள்வதே சரியானதாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஆகவே, வெளியுறவுத் துறை இணையமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம், அக்பர் பதவி விலகியிருப்பது நியாயமானது என்றும், உண்மைக்கு கிடைத்த வெற்றி என்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தன் மீது முதல் நபராக புகார் கூறிய பிரியா ரமணிக்கு எதிராக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அக்பர் அவதூறு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் எம்.ஜே.அக்பர் சார்பாக மூத்த வழக்கறிஞர் கீதா லூதாரா ஆஜரானார். அப்போது, பிரியா ரமணி வேண்டுமென்றே அக்பர் மீது அவதூறு பரப்பும் விதமாக ட்வீட் செய்துள்ளார். அதிலும் அவரது 2-ஆவது ட்வீட் அதில் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. அதை சுமார் 1,200 பேர் வரை வரவேற்றுள்ளனர்.

இந்த அவதூறு ட்வீட் பதிவை சர்வதேச மற்றும் நாட்டிலுள்ள அனைத்து பத்திரிகைகளும் மேற்கோள்காட்டியுள்ளன. அக்பரின் 40 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த பதிவுகள் அமைந்துள்ளன. இதில் பிரியா ரமணி அவரது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வரையில் அது அவதூறு பரப்புவதாகவே அமையும் என்று கீதா லூதாரா வாதிட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக அக்டோபர் 31-ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

எம்.ஜே.அக்பர் பல்வேறு பத்திரிகைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவ்வாறு பணியாற்றிய காலகட்டத்தில் தங்களுக்கு அவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக அண்மையில் பெண் பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து குற்றம்சாட்டி வந்தனர். 

நாடெங்கிலும், தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து மீ டூ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பெண்கள் அண்மைக்காலமாக புகார் கூறி வருகின்றனர். அந்த வகையில், பிரியா ரமணி என்ற பத்திரிகையாளர், முதல் நபராக எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தான் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பிரியா ரமணியை தொடர்ந்து ஏறக்குறைய 20 பெண் பத்திரிகையாளர்கள் அக்பருக்கு எதிராக இதுவரையில் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com