பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டம்: இரண்டாவது நாளாக முடங்கியது ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்ஹாம் மாவட்டத்தில் பிரிவினைவாதிகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்ரீநகரில் செவ்வாய்கிழமை இயல்பு


ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்ஹாம் மாவட்டத்தில் பிரிவினைவாதிகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்ரீநகரில் செவ்வாய்கிழமை இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 
குல்ஹாம் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்திருந்தனர். ஆனால், எச்சரிக்கையை மீறி அங்கு சென்றதால் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியதில் பொதுமக்கள் தரப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர். 
இச்சம்பவத்தை கண்டித்து பிரிவினைவாதிகள் அமைப்புகளின் சார்பில் திங்கள்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
இதனால் திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 
இந்நிலையில் செவ்வாய்கிழமை பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இருப்பினும், ஸ்ரீநகரின் வரலாற்று சிறப்புமிக்க லால் சவுக் மைதானத்தில் உள்ள கந்தகார் (மணிக்கூண்டு) பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். 
அதற்கு தடை விதித்து அப்பகுதியில், ஏராளமான போலீஸாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டதுடன், அங்கு பிரிவினைவாதிகள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. 
இதன் காரணமாக ஸ்ரீநகரில் இரண்டாம் நாளாக முழு அடைப்பு போராட்டம் தொடர்ந்ததால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. 
கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், வர்த்தக அமைப்புகளும் முழுமையாக மூடப்பட்டன. மேலும், பயணிகள் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது. 
முழு அடைப்பு போராட்டத்தால் செவ்வாய்கிழமை நடைபெறவிருந்த தேர்வுகளை கல்வி நிறுவனங்கள் தள்ளி வைத்ததுடன், பள்ளி, கல்லூரிகளும் இயங்கவில்லை. 
முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களான சையது அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com