மாவோயிஸ்டுகளுடனான தொடர்புக்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே ஐவர் கைது 

மாவோயிஸ்டுகளுடனான தொடர்புக்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாலேயே இடது சாரி ஆதரவாளர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹாராஷ்ட்ரா மாநில போலீசார் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளுடனான தொடர்புக்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே ஐவர் கைது 

புது தில்லி: மாவோயிஸ்டுகளுடனான தொடர்புக்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாலேயே இடது சாரி ஆதரவாளர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர  மாநில போலீசார் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பீமா-கோரேகான் போரின் 200-ஆவது ஆண்டு தினம் மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக இருவேறு பிரிவினரிடையே மோதல் வெடித்து அது வன்முறையாக மாறியது. அந்த வன்முறையில் ஒருவர் பலியானார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் குறிப்பிட்ட சிலர் இருந்ததாக புணே தொழிலதிபர் துஷார் தாம்குடே காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி தெலுங்கு கவிஞர் வரவர ராவ், சமூக ஆர்வலர் சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 5 இடதுசாரி ஆதரவாளர்கள் கடந்த 28-ஆம் தேதி

கைது செய்யப்பட்டனர். அதை எதிர்த்து வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாபர் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அதில் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இதனை அவசர வழக்காக எடுத்துக்கொண்டது. அப்போது மகாராஷ்டிர அரசு சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்கள்,"ஏற்கனவே ஆர்வலர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத நபர்கள், ஆர்வலர்களுக்காக வழக்கு தொடர முடியாது' என்று வாதிட்டனர்.

இதனைக் கேட்ட நீதிபதிகள்,"எதிர்ப்பு தெரிவிப்பது என்பது  மக்களாட்சியின் "பாதுகாப்பு வால்வு' போன்றது. அதனை அனுமதிக்காவிட்டால், அது வெடித்து சீரழிவை ஏற்படுத்திவிடும்' என்று தெரிவித்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக சிறையில் அடைக்காமல், காவல்துறையினரின் பாதுகாப்பில் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டனர். மேலும், குற்றம் நடைபெற்று 8 மாதங்கள் கழித்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் மாவோயிஸ்டுகளுடனான தொடர்புக்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாலேயே இடது சாரி ஆதரவாளர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹாராஷ்ட்ரா மாநில போலீசார் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மஹாராஷ்ட்ரா மாநில போலீசார் உச்ச நீதிமன்றத்தில் புதனன்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கைது செய்யப்பட்ட ஐவரும் அவர்கள் எதிர்க்குரல் எழுப்பியதன் காரணமாக கைது செய்யப்படவில்லை. மாவோயிஸ்டுகளுடனான அவர்களது தொடர்புக்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாலேயே கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நாட்டில் வன்முறைச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டதுடன் பாதுகாப்பு படையினருக்கு சேதம் ஏற்படுத்தவும் திட்டமிட்டிருந்தனர். 

இந்த வழக்கில் முற்றிலும் அந்நியர்களான வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாபர் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியம் புரியவில்லை.

இவ்வாறு அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com