தெலங்கானாவில் பயங்கரம்: மலைப்பாதையில் அரசுப் பேருந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
By IANS | Published on : 11th September 2018 03:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ஜாக்தியால் மாவட்டத்தில் மலைப் பாதையில் இருந்து அரசுப் பேருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான அரசுப் பேருந்து கொண்டாகட்டு மலையின் மேல் இருக்கும் ஆஞ்சநேயா சுவாமி திருக்கோயிலில் இருந்து கீழே வந்து கொண்டிருந்த போது மலைப் பாதையில் எதிர்பாராத விதமாக உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த பேருந்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 20 பெண்கள், 7 குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து செய்தி அறிந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிர்ச்சி அடைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், அந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
வேகத்தடை அருகே பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நேரிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.