இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்: டிரம்ப் நிர்வாக அதிகாரி தகவல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்று அதிபர்


இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்று அதிபர் டிரம்ப்பின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
இரு நாடுகளுக்குமிடையே அமைதியை உருவாக்க இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் உறுதி பூண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளது, இரு நாடுகளுக்கிடையே நிலவும் அசாதாரண சூழ்நிலையை நீக்கும் விதமாக அமைந்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளும், ஊடுருவல்களும் குறைந்தால், அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெறும் என்பதை இந்திய அதிகாரிகளிடமிருந்து நாங்கள் தெரிந்து கொண்டோம். இது குறித்து, பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கும் தகவல் அனுப்பியுள்ளோம். இவற்றைக் கடைப்பிடித்து, இரு நாடுகளும் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், நிச்சயம் அமெரிக்கா அதற்கு உறுதுணையாக நிற்கும் என்று வெல்ஸ் தெரிவித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா மேற்கொண்ட துல்லியத் தாக்குதல் நடவடிக்கை, பாகிஸ்தானை உளவு பார்த்ததாக இந்திய விமானப்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்-க்கு அந்நாடு மரண தண்டனை விதித்தது ஆகிய காரணங்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தடைப்பட்டுப் போனது.
இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கடந்த மாதம் 20-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் எழுதியிருந்த இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com