இளைஞர்கள் இறப்புக்கான முக்கியக் காரணம் தற்கொலை': ஆய்வில் தகவல்

இந்தியாவில் இளைஞர்கள் இறப்புக்கான முக்கியக் காரணமாகத் தற்கொலை உள்ளதாக லான்செட்' சுகாதார இதழில் வெளியான ஆய்வறிக்கை


இந்தியாவில் இளைஞர்கள் இறப்புக்கான முக்கியக் காரணமாகத் தற்கொலை உள்ளதாக லான்செட்' சுகாதார இதழில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 1990 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் நிகழ்ந்த தற்கொலைகளைக் குறித்து தனியார் அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் 2.30 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1990-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் ஒப்பிடும் போது, 15 முதல் 39 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள் தற்கொலையில், 63 சதவீதம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. இளைஞர்கள் இறப்புக்கான முதல் முக்கியக் காரணமாக தற்கொலை உள்ளது.
உலகளவில் 2016-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட ஆண்களில், 37 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். இதுவே, பெண்களில் 24 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். தற்கொலை விகிதமானது கேரளம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆண்களிடையே அதிகமாகவும், கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இருபாலரிடையேயும் அதிகமாகக் காணப்படுகிறது. 
முக்கியமாக நாட்டில் ஒரு லட்சம் பெண்களுக்கு 15 பேர் தற்கொலை செய்துள்ளனர். 
இது உலகளவிலான விகிதத்தை ஒப்பிடுகையில் 2 மடங்கு அதிகமாக உள்ளது. தற்கொலை விகிதமானது, திருமணமான பெண்களிடையே மிக அதிகமாகக் காணப்படுகிறது. 
அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கியக் காரணங்களாக முன்கூட்டிய திருமணம், இளம் வயதிலேயே தாயாகுதல், குறைந்த அளவிலான சமூக அந்தஸ்து, குடும்பம் சார்ந்த வன்கொடுமைகள், பொருளாதாரச் சார்புநிலை ஆகியவை உள்ளன.
ஆண்கள் தற்கொலை விகிதமானது, இளைஞர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. தனிப்பட்ட காரணங்கள், பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகள், ஆரோக்கியமின்மை ஆகியவை ஆண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.
முதியோர்கள் தற்கொலை: மேலும், நாட்டில் 80 வயதுக்கும் அதிகமான முதியோர்கள், தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. 
தனித்து வாழ்தல், மன அழுத்தம், செயல்பட முடியாமை, குடும்பத்துக்கு சுமையாக இருப்பதாகக் கருதுதல் ஆகியவை முதியோர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன. 
இவற்றைத் தடுக்க மாநில அளவிலான மற்றும் பாலின அடிப்படையிலான தேசிய தற்கொலைத் தடுப்பு திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com