எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான நிலுவை வழக்குகள் விவரம்: மாநில அரசுகளிடம் அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் முழு விவரத்தை அளிக்குமாறு 25 மாநில அரசுகளுக்கும்,
எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான நிலுவை வழக்குகள் விவரம்: மாநில அரசுகளிடம் அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்


நாடு முழுவதும் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் முழு விவரத்தை அளிக்குமாறு 25 மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ள வழக்குகளின் விவரத்தை அனைத்து உயர் நீதிமன்றங்களும் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஸ்வினி குமார் உபாத்யாய என்ற வழக்குரைஞர் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சஜன் பூவய்யா முன்வைத்த வாதம்:
எம்.பி., எம்எல்ஏக்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்காக, தமிழ்நாடு, ஆந்திரம், பிகார், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம், தில்லியில் 2 சிறப்பு நீதிமன்றம் என மொத்தம் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நீதிமன்றங்களுக்கு மொத்தம் 1,233 வழக்குகள் மாற்றப்பட்டன; அவற்றில் 136 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன; 1,097 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று அரசின் பிரமாணப் பத்திரம் தெரிவிக்கிறது.
எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக 1,581 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்தது. இந்த ஆண்டில் அந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும்.
மேலும், ஆந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு 25 வழக்குகள் மாற்றப்பட்டிருப்பதாக அரசின் பிரமாணப் பத்திரம் தெரிவிக்கிறது. அந்த மாநிலம் முழுவதும், எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக 25 வழக்குகள் மட்டும்தான் நிலுவையில் உள்ளதா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என்று சஜன் பூவய்யா வாதிட்டார்.
அதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:
எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரத்தை சமர்ப்பிக்குமாறு கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதியும், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதியும் மாநில அரசுகளிடம் கேட்டிருந்தோம். ஆனால், அந்த விவரத்தை குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட 25 மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் சமர்ப்பிக்கவில்லை. எனவே, இந்த மாநிலங்களின் தலைமைச் செயலர்களும், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்களும், நிலுவை வழக்குகள் பற்றிய விவரங்கள் அடங்கிய துல்லியமான அறிக்கையை, அடுத்த விசாரணை நடைபெறவுள்ள அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டிய வழக்குகள் குறித்த விவரங்களும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com