திரிபுரா உள்ளாட்சி இடைத் தேர்தல்: பாஜக கூட்டணி கட்சிகள் இடையே மோதல்

திரிபுரா மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக, திரிபுரா


திரிபுரா மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக, திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) கட்சிகளுக்கு இடையே மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.
திரிபுரா மாநிலம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகள், நகர பஞ்சாயத்துகள், மாவட்ட பஞ்சாயத்துகளில் காலியாக இருக்கும் 3,000 இடங்களுக்கு வரும் 30ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஐபிஎஃப்டி கட்சி, இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இடைத் தேர்தல் நடைபெறும் 35 கிராமப்புற பஞ்சாயத்துகளில் 16இல் மட்டுமே அக்கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் சுதந்திரமாக வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிவித்து, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொது செயலாளர் மங்கள் தேவ் வர்மா கூறுகையில், பல்வேறு மாவட்டங்களிலும் எங்கள் கட்சியினரை பாஜகவினர் தாக்குகின்றனர். எங்கள் கட்சி வலுவடைவதை பாஜக விரும்பவில்லை' என்றார்.
இதேபோல், ஐபிஎஃப்டி கட்சித் தலைவரும், வருவாய் அமைச்சருமான நரேந்திர சந்திர தேவ் வர்மா, திரிபுராவில் சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குரியதாகி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் பாஜகவும், ஐபிஎஃப்டி கட்சியும் தனித்தனியாக போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், மாநில அரசில் இரு கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இருப்பினும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொண்டு, இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன' என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் மிருனாள் காந்தி தேவ்விடம், ஐபிஎஃப்டி கட்சியின் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, பிற கட்சியினரை தாக்கும் நடவடிக்கையில் பாஜகவினர் ஈடுபடவில்லை என்றார்.
இதேபோல், முக்கிய எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com