மோசடி கடனாளிகள் பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட வேண்டும்

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த மோசடி கடனாளிகள் பட்டியலை பிரதமர் அலுவலகம் பகிரங்கமாக வெளியிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்
மோசடி கடனாளிகள் பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட வேண்டும்


ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த மோசடி கடனாளிகள் பட்டியலை பிரதமர் அலுவலகம் பகிரங்கமாக வெளியிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வாராக் கடன்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சமர்பித்துள்ளார். அதில் வாராக் கடன்கள் உருவாவதற்கான காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். மோசடியாக உள்நோக்கத்துடன் கடன் பெறுவது முக்கியமான காரணமாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர் அளித்த பட்டியலில் நீரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோரின் பெயர் உள்ளதாகவும், அவர்களை நாட்டை விட்டு தப்பிச் செல்ல அனுமதித்தது எப்படி என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
விவசாயிகளும், மாணவர்களும் வாங்கும் கடன்களுக்காக, அவர்களை அவமானப்படுத்தி அடியாட்களை வைத்து மிரட்டி வங்கிகள் தரும் நெருக்கடியால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கு பாதுகாப்பளித்து அவர்களை வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல பாஜக அரசு உதவுகிறது. பிரதமர் அலுவலகத்துக்கு ரகுராம் ராஜன் அளித்த மோசடி கடனாளிகளின் பட்டியலை உடனே பகிரங்கமாக வெளியிட வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com