9% குறைவான விலையிலேயே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன: நிர்மலா சீதாராமன் விளக்கம்

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் இறுதி செய்யப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில், 9 சதவீதம் குறைவான விலையிலேயே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன
9% குறைவான விலையிலேயே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன: நிர்மலா சீதாராமன் விளக்கம்


முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் இறுதி செய்யப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில், 9 சதவீதம் குறைவான விலையிலேயே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது போர் விமானங்களின் விலையை அரசு குழு இறுதி செய்யும் வேலையில் ஈடுபட்டபோது, அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தேவையில்லாமல் அதிகம் தலையீடு செய்தார்.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகு, பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கும்போது ஏற்படும் விலையைக் காட்டிலும், இந்தியாவில் ரஃபேல் போர் விமானத்தை தயாரித்தால் அதன் விலை பலமடங்கு அதிகரிக்கும் என டஸால்ட் நிறுவனம் கருதியது. இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, ரஃபேல் போர் விமானத்தை தயாரித்தால், அந்த விமானங்களுக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்டு டஸால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஏனெனில், இது மிகப்பெரிய விவகாரம் ஆகும். அந்த போர் விமானங்களுக்கு இந்திய விமானப்படை உத்தரவாதங்களை கோரியது. ஆனால் அந்த உத்தரவாதத்தை அளிக்கும் நிலையில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் இல்லை.
இதை புரிந்து கொண்டு, அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு உதவ முன்வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் மோசமான நிலையின் காரணமாகவே, காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தை மட்டம் தட்டுவதற்காக இந்த கருத்தை நான் தெரிவிக்கவில்லை. அந்நிறுவனத்துக்கு தேவையான மூலஆதாரங்களை அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏன் அளிக்க முன்வரவில்லை என்பதுதான் எனது கேள்வியாகும். ஆனால், தற்போது மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு, அந்நிறுவனத்தை சக்திமிக்கதாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், புதிதாக மத்திய பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து நமக்கு வரும் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வழங்கப்படும். காங்கிரஸ் கூட்டணி அரசால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததை விட, இந்த போர் விமானங்கள் மிகவும் சக்திமிக்கவை. அதேபோல், காங்கிரஸ் கூட்டணி அரசால் ஒப்புக் கொள்ளப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில், 9 சதவீதம் குறைவான விலையிலேயே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன.
ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். இந்த விவகாரத்தை நாட்டு மக்கள் எப்போதோ மறந்து விட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் மீது அவர்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசு, ஊழல் கறைபடியாத அரசாகும். இதனால் காங்கிரஸ் விரக்தியில் இருக்கிறது. பாஜக அரசிடம் இருந்து அக்கட்சி பாடம் கற்க வேண்டும். 
இதை தலைக்கனத்துடன் நான் தெரிவிக்கவில்லை. நம்பிக்கையின் அடிப்படையிலேயே தெரிவிக்கிறேன். பாதுகாப்பு அமைச்சகம் 3ஆவது தரப்பின் தலையீடு இல்லாமல் வெளிப்படையாக செயல்படுகிறது. பாதுகாப்பு தளவாட கொள்முதல்கள் அனைத்தும் இடைத்தரகர்கள் இல்லாமல் மேற்கொள்ள முடியும் என்பதையும் நாங்கள் நிரூபித்து காட்டியுள்ளோம் என்றார் நிர்மலா சீதாராமன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com