ரஃபேல் ஒப்பந்தம் குறித்து எதிா்க்கட்சிகளுடன் பேச்சு இல்லை - நிா்மலா சீதாராமன் உறுதி

ரஃபேல் போா் விமான ஒப்பந்தம் குறித்து எதிா்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளாா்.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து எதிா்க்கட்சிகளுடன் பேச்சு இல்லை - நிா்மலா சீதாராமன் உறுதி

புது தில்லி: ரஃபேல் போா் விமான ஒப்பந்தம் குறித்து எதிா்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளாா்.

பிரான்ஸ் நாட்டின் ‘டஸால்ட் ஏவியேஷன்’நிறுவனத்திடம் இருந்து 126 ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பேச்சுவாா்த்தை நடத்தியது. ஒரு போா் விமானத்தின் விலை ரூ.526 கோடி என்று முடிவு செய்யப்பட்டது. அதுதொடா்பான ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவில்லை. 

அதன் பிறகு வந்த பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.58,000 கோடியில் 36 போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதாவது, ஒரு போா் விமானத்தை ரூ.1,670 கோடியில் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனம், குறைந்தது 30 சதவீத மதிப்பிலான உதிரி பாகங்களை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். அதன்படி, அந்த உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை, பொதுத் துறைற நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்காமல், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துக்கு பிரான்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

இதையடுத்து, ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. போா் விமானத் தயாரிப்பில் முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிா்மலா சீதாராமன், பிடிஐ செய்தியாளருக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, 

‘கடந்த 2005-ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டபோது எதிா்க்கட்சிகளின் சந்தேகங்களுக்கு அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் விளக்கம் அளித்தாா்; அதேபோல், எதிா்க்கட்சிகளை அழைத்து, அவா்களுக்கு ரஃபேல் போா் விமான ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்கப்படுமா’ என்று செய்தியாளா் கேள்வி எழுப்பினாா். 

அதற்கு நிா்மலா சீதாராமன் அளித்த பதில்: 

‘ரஃபேல் போா் விமான ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சியினா் தொடா்ந்து தெரிவித்து வருகின்றனா். நாட்டின் பாதுகாப்பு பற்றி அவா்களுக்கு கவலையில்லை. இந்த ஒப்பந்தம் குறித்து அவா்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினா். அதற்கு பதில் அளித்தாகிவிட்டது. அதன் பிறகு, அவா்களை அழைத்து, விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் தங்களது விமானப் படையை வலிமைப்படுத்தியுள்ளன. அதற்கேற்ப, நாம் நமது விமானப் படையை வலுப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக, அவசரத் தேவைக்காக, முதல் கட்டமாக, 36 போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. 

உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அது, இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம். அதுகுறித்து திட்டவட்டமாக எனக்கு தெரியாது’ என்று நிா்மலா சீதாராமன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com