மல்லையா விவகாரத்தில் ஜேட்லியை குற்றம்சாட்டுவது கேலிக்குரியது: சிவசேனா

அருண் ஜேட்லியை சந்தித்து பேசியதாக விஜய் மல்லையா தெரிவித்ததையடுத்து, ஜேட்லி மீது காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுவது கேலிக்குரியது என்று சிவசேனா சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அருண் ஜேட்லியை சந்தித்து பேசியதாக விஜய் மல்லையா தெரிவித்ததையடுத்து, ஜேட்லி மீது காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுவது கேலிக்குரியது என்று சிவசேனா சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது. 

இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற விஜய் மல்லையா, அதனை திரும்ப செலுத்தாமல் லண்டன் தப்பியோடினார். இதையடுத்து, அவரை நாடு கடத்துவது தொடர்பாக பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு முன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாக விஜய் மல்லையா அண்மையில் தெரிவித்தார். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜேட்லி மற்றும் பிரதமர் மீது காங்கிரஸ் கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டை எழுப்பினர். பாஜகவும் பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஜேட்லி மீது குற்றம்சாட்டுவது கேலிக்குரியது என்று சிவசேனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான சாமனாவின் தலையங்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 

"இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு முன் ஜேட்லியை சந்தித்ததாக லண்டனில் வைத்து மல்லையா கூறிய கருத்து அருண் ஜேட்லியை பிரச்னையில் சிக்கவைத்துள்ளது. மல்லையா பொய் பேசுபவர். மல்லையாவின் கருத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு இந்த வழக்கில் ஜேட்லி மீது குற்றம்சாட்டுவதின் அவசியம் என்ன? ஆனால், காங்கிரஸ் அதை தான் செய்கிறது.   

நாடாளுமன்ற உறுப்பினராக அவருக்கான உரிமை நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கிறது. மல்லையாவின் திட்டத்தை ஏற்க வங்கிகள் தயாராக இல்லை. அதனால், தான் அவர் ஜேட்லியை நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்துள்ளார். இதை காரணம் காட்டி இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் பூனியா ஜேட்லியை குற்றம்சாட்டுவது கேலிக்குரியது. 

நீரவ் மோடி குடும்ப நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதனால், நீரவ் மோடி தப்பித்துச் சென்றதற்கு ராகுல் காந்தியை குற்றம்சாட்டலாமா? 

பல ஆண்டுகள் கழித்து மல்லையா இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த சந்திப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு முன்கூட்டியே தெரியும் பட்சத்தில் இத்தனை நாட்களாக அதை ஏன் அவர்கள் மறைத்து வைத்திருந்தார்கள். அல்லது, மல்லையாவின் கருத்துக்கும், காங்கிரஸ் கட்சியின் தொடர் குற்றச்சாட்டுக்கும் பின்னணியில் யாரேனும் உள்ளனரா? இவையனைத்து 2019 தேர்தலின் பகுதி தான்.  

போஃபர்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இத்தாலி நாட்டு தொழிலதிபர் ஓட்டவியோ 1993-இல் இந்தியாவில் இருந்து தப்பித்துச் சென்றவர், அதன் பிறகு இந்தியாவுக்கு திரும்பவே இல்லை. இந்திய அரசின் உதவியோ, சிபிஐ-யின் உதவியோ இல்லாமல் அவர் தப்பித்திருக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக எந்த விசாரணையும் எதிர்கொள்ளாமல் அவர் 2013 ஜூலையில் காலமானார்". 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com