ஓயாத மல்லையா சர்ச்சை: ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு; சிபிஐ மீண்டும் விளக்கம்

விஜய் மல்லையா தப்பித்துச் சென்றதற்கு சிபிஐ அதிகாரி உதவியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்ட, அதற்கு மறுப்பு தெரிவித்து சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

விஜய் மல்லையா தப்பித்துச் சென்றதற்கு சிபிஐ அதிகாரி உதவியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்ட, அதற்கு மறுப்பு தெரிவித்து சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டன் தப்பியோடிவிட்டார். இந்நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையாக இந்திய அரசு லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு முன்பு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறி விஜய் மல்லையா சர்ச்சையை கிளப்பினார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஒரு டிவிட்டர் பதிவை பதிவிட்டார். அதில், விஜய் மல்லையா மத்திய நிதியமைச்சரை சந்தித்தததும், மல்லையா மீதான லுக் அவுட் நோட்டீஸை வலுவிழக்கச் செய்தததும் மறுக்கப்படாத உண்மை என்றார். 

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மல்லையா விவகாரத்தில் அருண் ஜேட்லி மீது விமரிசனங்களை அடுக்கினர். 

இதுதொடர்பாக, ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) டிவிட்டரில் கருத்து பதிவிட்டார். அதில், பிரதமருக்கு நெருக்கமான சிபிஐ கூடுதல் இயக்குநர் ஏகே சர்மா மல்லையா தப்பித்துச் செல்வதற்கு லுக் அவுட் நோட்டீஸை வலுவிழக்கச் செய்து உதவியதாக குற்றம்சாட்டினார். மேலும், நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோக் தப்பித்துச் செல்வதற்கும் இதே அதிகாரி உதவியுள்ளார் என்ற வகையிலும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். 

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த விளக்கத்தில், ஏற்கனவே பலமுறை விளக்கமளித்ததுபோல் விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை மாற்றியதற்கான முடிவு அந்த நேரத்தில் அவரை கைது செய்வதற்கான போதிய காரணம் சிபிஐ வசம் இல்லை. இந்த முடிவை குற்றம்சாட்டுவது போல் சிபிஐ அதிகாரி தனிச்சையாக எடுத்தது கிடையாது. சிபிஐ நடைமுறையின் படியே எடுக்கப்பட்டது என்று விளக்கமளித்துள்ளது. மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் விவகாரத்தில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி இந்தியாவில் தப்பித்து 1 மாதத்துக்குப் பிறகு தான் சிபிஐ-யிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனால், அவர்கள் தப்பித்துச் சென்றதற்கு குறிப்பிட்ட சிபிஐ அதிகாரி தான் காரணம் என்று கேள்வி எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தது.   

சிபிஐ தரப்பில் இதுதொடர்பாக ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com