நிதிப் பற்றாக்குறை அதிகரிக்காது

நிகழ் நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை விகிதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் அதிகரிக்காது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரி வருவாயும்,
நிதிப் பற்றாக்குறை அதிகரிக்காது

நிகழ் நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை விகிதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் அதிகரிக்காது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரி வருவாயும், பங்கு விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியும் அதிகரிக்க வாய்ப்புள்ளதே அதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை; முன்னெப்போதும் இல்லாதபடி வீழ்ச்சியடைந்துள்ள இந்திய ரூபாயின் மதிப்பு; வாராக் கடன்களால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களை தேசம் எதிர்கொண்டு வருகிறது.
 இந்த கடினமான சூழலுக்கு தீர்வு காண்பது குறித்தும், பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிப்பதற்கான ஆய்வுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் தில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அரசுத் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் அப்போது பிரதமர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 முன்னதாக, தற்போதைய நிதிச் சூழல் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். அதைக் கேட்ட பிறகு, அவர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்துக்குப் பிறகு அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 நிகழாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொருளார நெருக்கடி காரணமாக அந்த விகிதத்தை உயர்த்தி அறிவிக்கலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால், அரசு பங்குகள் மூலம் கூடுதலாக நிதி திரட்டவும், வரி வருவாயைப் பெருக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் நிதிப் பற்றாக்குறை இலக்கை மாற்றியமைக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதைக் காட்டிலும் கூடுதலான வளர்ச்சியை அடைவோம் என்ற நம்பிக்கை தற்போது எழுந்துள்ளது. அதேபோன்று பங்கு விற்பனை மூலம் ரூ. 1 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதைக் காட்டிலும் அதிகமான வருவாய் அதன் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com