பாலியல் புகார் எதிரொலி: திருச்சபை நிர்வாகப் பொறுப்பிலிருந்து பேராயர் விலகல்

கேரளத்தில் பாலியல் புகாருக்கு ஆளான பேராயர் ஃபிரான்கோ முலக்கல், ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார்.

கேரளத்தில் பாலியல் புகாருக்கு ஆளான பேராயர் ஃபிரான்கோ முலக்கல், ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார். அவரை வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கேரள காவல் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
 இது தொடர்பாக அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
 என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமற்றவை. எனக்கு எதிராக பல முரண்பாடான ஆதாரங்களைக் காவல் துறையினர் சேகரித்து வைத்துள்ளனர். விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை வரும் வரை பொறுமையாகக் காத்திருக்கப் போகிறேன். எனக்காக அனைவரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். என் மீது குற்றம்சாட்டியவருக்கும், எனக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோருக்கும் கடவுளின் அறிவொளி கிடைக்க வேண்டிக் கொள்ளுங்கள். அப்போது தான், என் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை அவர்கள் உணர்வார்கள்.
 இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் கடவுளிடம் விட்டுவிடுகிறேன். இவையனைத்தும் தீரும் வரை, ஜலந்தர் திருச்சபை மாவட்டத்தின் நிர்வாகம் சார்ந்த அனைத்து பொறுப்புகளையும் பேரருட்திரு மேத்யூ கொக்கண்டம் கவனித்துக் கொள்வார் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 5 கன்னியாஸ்திரிகளுள் ஒருவர்,"இந்த முடிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் பேராயரிடம் இன்னமும் பல்வேறு அதிகாரங்கள் உள்ளன. அவரால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நியாயம் கிடைக்கும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும்' என்று தெரிவித்தார்.
 இந்நிலையில், "கன்னியாஸ்திரிகள் எல்லை கடந்து செயல்பட்டு வருகின்றனர். சில ஊடகங்கள் அவர்களுக்கு உதவி வருகின்றனர். அதன் மூலம் திருச்சபையின் கண்ணியத்துக்கு களங்கம் விளைவிக்க அவர்கள் முயன்று வருகின்றனர். இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது இல்லை' என்று கேரள கத்தோலிக்க பேராயர் சபை குற்றம் சாட்டியது.
 முன்பாக, இந்த வழக்கு தொடர்பாக வாடிகன் திருச்சபை தலையிட்டு, தனக்கு நியாயத்தை வழங்க வேண்டும் என்றும், ஜலந்தர் திருச்சபை மாவட்ட நிர்வாகப் பொறுப்பிலிருந்து பேராயரை நீக்க வேண்டும் என்றும், அவரால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், பேராயர் தனது அரசியல் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்தி, இந்த வழக்கிலிருந்து தப்பிக்க முயல்வதாகவும், அவர் குற்றம் சாட்டினார்.
 இதனிடையே, சட்ட விதிகளுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்டது தொடர்பாக ஜலந்தர் திருச்சபை உறுப்பினர்கள் பதிலளிக்க கேரள காவல் துறையினர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 தில்லியில் உள்ள ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் பேராயராக இருந்த ஃபிரான்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகாரை முன்வைத்தார். கடந்த 2014-இல் இருந்து 2016 வரையில் ஃபிரான்கோ பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதைக் கேரள காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், அந்தப் பேராயரை வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
 கடந்த வெள்ளிக்கிழமை, பேராயர் மீது பாலியல் புகாரை முன்வைத்த கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை சம்பந்தப்பட்ட திருச்சபை வெளியிட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com