பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு விரைவில் மத்திய அரசு தீர்வு கொண்டு வரும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு விரைவில் மத்திய அரசு தீர்வு கொண்டு வரும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது.
 இதுகுறித்து தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமித் ஷாவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
 பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றை கண்டு மத்திய அரசும், பாஜகவும் கவலையடைந்துள்ளன. உலக அளவில் நடைபெறும் சில நிகழ்வுகளே, இதற்கு காரணமாகும். அதாவது, அமெரிக்கா, சீனா இடையே நடைபெறும் வர்த்தக போர், அமெரிக்காவுக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்னைகளே பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணமாகும்.
 விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இந்த விவகாரத்துக்கு குறுகிய காலத்தில் மத்திய அரசு தீர்வை கண்டுபிடித்து, வெளியிடும்.
 பிற நாடுகளின் செலாவணிகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு குறைவுதான். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள பிடிவாரண்ட் உத்தரவு குறித்து கேட்கிறீர்கள். அதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
 ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய 2 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தபோதுதான், கோதாவரி நதியில் பாப்லி திட்டத்தை செயல்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சந்திரபாபு நாயுடு போராட்டம் நடத்தியது தொடர்பான விவகாரத்திலேயே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2010ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 2013ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பலமுறை அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு சந்திரபாபு நாயுடு பதிலளிக்கவில்லை. இதனாலேயே அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
 தனக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோருடன்தான் (காங்கிரஸ்) தற்போது சந்திரபாபு நாயுடு கூட்டணி வைக்க முயற்சி எடுத்து வருகிறார். இந்த விவகாரத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தி, அதில் ஆதாயம் அடைய நினைக்கிறார் சந்திரபாபு நாயுடு என்று அமித் ஷா கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com