வரதட்சிணை கொடுமை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

வரதட்சிணை கொடுமை சட்டத்தை பழிவாங்கும் நோக்கத்திலும், கோபத்தை வெளிப்படுத்தும் நோக்கத்திலும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
வரதட்சிணை கொடுமை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

வரதட்சிணை கொடுமை சட்டத்தை பழிவாங்கும் நோக்கத்திலும், கோபத்தை வெளிப்படுத்தும் நோக்கத்திலும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
 வரதட்சிணை புகார்களில், காவல் துறையினர் உடனடியாகக் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
 இந்திய தண்டனையியல் சட்டத்தின் 498ஏ பிரிவின்படி, வரதட்சிûணை புகாருக்கு ஆளாகும் கணவர், அவரது குடும்பத்தினர் ஆகியோரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்யலாம்.
 ஆனால், இந்த சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
 அப்போது, 498ஏ பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக கவலை தெரிவித்த நீதிபதிகள், வரதட்சிணை புகார்களை விசாரிக்க குடும்ப நலக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்; அந்த குழுக்களின் அறிக்கை கிடைக்கப் பெறும் வரை காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
 இதையடுத்து, இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி உச்சமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
 அப்போது நீதிபதிகள் கூறியதாவது: வரதட்சிணை புகார்களை விசாரிக்க குடும்ப நல குழுக்களை அமைக்க தேவையில்லை; புகாருக்கு ஆளானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமிருந்தால், காவல்துறையினர் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
 வரதட்சிணை கொடுமை வழக்குகளை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனவே, பழிவாங்கும் எண்ணத்துடனோ, கோபத்தை வெளிப்படுத்தவோ வரதட்சிணை கொடுமை சட்டப் பிரிவுகளை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com