வாராணசியில் ஜனவரி 21-இல் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாடு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு, உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
வாராணசியில் ஜனவரி 21-இல் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாடு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு, உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், அடுத்த சில தினங்களில் அங்கு நடைபெறும் கும்ப மேளா, தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா ஆகியவற்றில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
 மகாத்மா காந்தி, தென் ஆப்பிரிக்காவில் இருந்து 1915-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி இந்தியா திரும்பினார். அதன் நினைவாக, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களைக் கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9-ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
 இந்நிலையில், அடுத்த ஆண்டில் அதற்கு மாற்றாக, அந்த மாநாடு ஜனவரி 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதமரின் சொந்தத் தொகுதியான வாராணசியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
 உத்தரப் பிரதேச மாநில அரசும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த மாநாட்டினை நடத்துகின்றன.
 இந்நிலையில், மாநாட்டுக்கான சிறப்பு இணையதளத்தை தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்த இணையதளத்தில் வரும் நவம்பர் 15-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.
 பின்னர் சுஷ்மா ஸ்வராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலர், உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் கும்ப மேளாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர். அதற்கேற்ப இந்த முறை, மாநாடு நடைபெறும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்பவர்கள், ஜனவரி 23-ஆம் தேதி மாநாடு முடிந்த பிறகு, 24-ஆம் தேதி நடைபெறும் கும்ப மேளாவுக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவர். பின்னர், அங்கிருந்து தில்லியில் 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவைக் காண ரயில்களில் அழைத்துச் செல்லப்படுவர்.
 மாநாட்டில் மோரீஷஸ் பிரதமர், நார்வே நாட்டின் தலைவர், நியூஸிலாந்து எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com