தமிழ் அமைப்புகள்தான் இனி தமிழை வளர்க்க வேண்டும்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

தமிழ் அமைப்புகள்தான் இனி தமிழை வளர்க்க வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.
தமிழ் அமைப்புகள்தான் இனி தமிழை வளர்க்க வேண்டும்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

தமிழ் அமைப்புகள்தான் இனி தமிழை வளர்க்க வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.
 கர்நாடக மாநிலம், சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் பேரவைத் தலைவர் மு. மீனாட்சிசுந்தரம் தலைமையில், செயல் தலைவர்கள் முத்துராமன், கு.புகழேந்தி முன்னிலையில் நடைபெற்றது.
 இக் கூட்டத்தில், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கலந்துகொண்டு பேசியதாவது: தினமணி, தில்லி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து தில்லியில் தமிழ் அமைப்புகளின் மாநாட்டை நடத்தியது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில், இந்தியாவில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன. அந்த மாநாட்டில்தான் "தமிழால் இணைவோம், தமிழுக்காக இணைவோம்' என்கிற அறைகூவலை தினமணி முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள தமிழ்ச் சங்கங்கள் ஒருங்கிணைந்து, தமிழ் வளர்க்கும் பணியில் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை என்கிற பெயரில் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
 தமிழ் அமைப்புகள்தான் இனி தமிழை வளர்க்க முடியும் என்பதனை உணர்ந்து, தேசிய அளவில் மட்டுமின்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தமிழ் சங்கங்கள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும். கூட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மாவட்ட அளவிலும் வட்ட அளவிலும் தமிழ் அமைப்புகள் உருவாக வேண்டும்.
 ஆங்கில வழிக் கல்வி என்பது தவிர்க்க இயலாததாகி விட்டது. இந்தநிலையில், நமது குழந்தைகள் தமிழ் படித்தாக வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தமிழ் இலக்கிய அமைப்புகள் தமிழ் வகுப்புகளை நடத்தி குழந்தைகள் தமிழில் எழுதவும் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்களாக இருப்பதை உறுதிப்படுத்துவதுதான். இந்தப் பணியில் வெளிமாநிலங்களிலும் வெளிநாட்டிலும் தமிழ் அமைப்புகள் முனைப்பு காட்டுவதுபோல தமிழகத்திலுள்ள அமைப்புகளும் செயல்பட வேண்டும்.
 தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் வளர்க்கும் பணியில் ஏராளமான தமிழ் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஒடிஸா, கர்நாடகத்தில் அந்தந்த மாநில அரசுகள் தமிழ்ச் சங்கங்களுக்கு நிலம் ஒதுக்கி, கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கி இருக்கின்றன. குறிப்பாக, சிவமொக்காவில் உள்ள தாய் தமிழ்ச் சங்கத்துக்கு கர்நாடக அரசு நிதி உதவி அளித்துள்ளது. அதுபோல, தமிழ்ப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ் அமைப்புகளை ஊக்குவிக்க தமிழக அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
 மதச் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் மரியாதை, உரிமை, சலுகைகளை, மொழிச் சிறுபான்மையினருக்கும் வழங்க வேண்டும் என்பதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு ஆங்காங்கே உள்ள தமிழ் அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
 முன்னதாக, சிவமொக்கா நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்களான சிவகுமார் மற்றும் சசிகுமாரை தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பாராட்டி, கெüரவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com