ரஃபேல் விவகாரத்தில் புதிய உண்மைகள் வெளிவரும்: ராகுல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான புதிய உண்மைகள் விரைவில் வெளிவரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தற்போது அதுதொடர்பாக தாம் வெளியிட்டு
உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.


ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான புதிய உண்மைகள் விரைவில் வெளிவரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தற்போது அதுதொடர்பாக தாம் வெளியிட்டு வரும் ஆதாரங்கள் வெறும் தொடக்கம்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்குச் சாதகமாகச் செயல்படுவதற்காக பிரதமர் மோடி, நாட்டின் பாதுகாப்புப் படையினரையும், அவர்தம் குடும்பத்தினரையும் அவமதித்து விட்டதாகவும் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 
இதனிடையே, ரஃபேல் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.
பிரதமருக்கு நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைப்பதற்காகவே பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு அந்தப் பணிகளை வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மக்களின் பணத்தை அபகரித்து தொழிலதிபர்களுக்கு பிரதமர் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது மக்களவைத் தொகுதியான அமேதிக்குச் சென்றுள்ள ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரஃபேல் விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு பணிகளை ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்காமல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அதை ஒதுக்கீடு செய்ததால் அமேதி தொகுதியைச் சேர்ந்த பல இளைஞர்கள் பணி வாய்ப்பை இழந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மேலும் பல புதிய உண்மைகள் விரைவில் வெளியே வர உள்ளது என்றார் அவர்.
முன்னதாக, சுட்டுரையில் இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:
ராணுவம் மற்றும் விமானப் படை வீரர்களுக்கும், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படையினருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், ஹெச்ஏஎல் நிறுவன ஊழியர்களுக்கும் நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். உங்களது வலிகளையும், வேதனைகளையும் என்னால் உணர முடிகிறது. 
உங்களை அவமதித்ததுடன் நில்லாமல், உங்களது பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றவர்களை நீதியின் முன்னால் நிறுத்துவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வேன் என்று அந்தப் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com