விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடாக ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு: கேரள முதல்வர் தகவல் 

தவறான குற்றச்சாட்டின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, இழப்பீடாக வழங்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினரயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். 
விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடாக ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு: கேரள முதல்வர் தகவல் 

திருவனந்தபுரம்: தவறான குற்றச்சாட்டின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, இழப்பீடாக வழங்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினரயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். 

இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக கடந்த 1994-ஆம் ஆண்டில் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அன்றைய சூழலில், அது மிகுந்த பரபரப்பு உடைய செய்தியானது. மாலத்தீவு பெண்கள் இருவர், மற்றொரு விஞ்ஞானி உள்ளிட்டோரும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். 

அப்போதைய கேரள காவல்துறை தலைவர் சிபி மாத்யூஸ், அன்றைய காவல் கண்காணிப்பாளர்கள் ஜோஷுவா, விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதில், நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு எதிரான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு மாத சிறைவாசத்துக்கு பின் நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த பொய் வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 1998-ஆம் ஆண்டில் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே, தான் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நம்பி நாராயணன் வழக்கு தொடுத்தார். அதில் அவருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தமக்கு எதிராக பொய் வழக்கு தொடுத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நம்பி நாராயணன் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

விசாரணை முடிவில் நம்பி நாராயணனன் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார் என்றும், அவர் மீதான கைது நடவடிக்கை தேவையற்றது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது   

அத்துடன் நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் 3 நபர்கள் அடங்கிய விசாரணைக் குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவறான குற்றச்சாட்டின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, இழப்பீடாக வழங்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினரயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கேரளா அமைச்சரவையின் வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

நம்பி நாராயணனுக்கு இந்தப் பணம் வெகு விரைவில் வழங்கப்படும். தவறாக வழக்குப் புனைந்து அவரைக் கைது செய்து தவறிழைத்த காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து இந்தப் பணத்தை வசூலிக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு சட்டத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.  

நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், கேரளாவின் பிரதிநிதியாக முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் செந்தில் செயல்படுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்துளளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com