ஆதார் சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்றியது சட்ட விரோதம்

ஆதார் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பண மசோதாவாக நிறைவேற்றியிருப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆதார் சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கவும்
ஆதார் சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்றியது சட்ட விரோதம்


ஆதார் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பண மசோதாவாக நிறைவேற்றியிருப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆதார் சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கவும் வாய்ப்புள்ளது என்று நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.
ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை புதன்கிழமை வழங்கியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய்.சந்திரசூட், மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அவர் கூறியதாவது:
ஆதார் சட்டம், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படாமல், பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு நிறைவேற்றியிருக்கக் கூடாது. இது, அரசமைப்புச் சட்டத்தின் 110-ஆவது விதிக்குப் புறம்பானதாகும். தற்போதைய நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ள ஆதார் சட்டத்தை அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டது என்று கூற முடியாது. ஆதார் சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்றியிருப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான செயலாகும். இந்தச் சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
ஆதார் சட்டத்தை அமல்படுத்துவதால், மத்திய அரசின் ஆதார் திட்டம் காப்பாற்றப்பட்டதாகக் கருதிவிட முடியாது.
வங்கிக் கணக்குகளிலும், செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதிலும் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
செல்லிடப்பேசிகள், மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டன. செல்லிடப்பேசி சேவையைப் பெறுவதற்கு ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது. இது தனிமனிதரின் அந்தரங்கம், சுதந்திரம் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை திருத்துவதற்கும், அழிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
இதேபோல், கருப்புப் பண தடுப்புச் சட்டப்படி, வங்கிக் கணக்கு தொடங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் கடனாளிகள். அதனடிப்படையில்தான், வாடிக்கையாளர்கள் தீவிரவாதிகளைப் போல சித்திரிக்கப்படுகிறார்கள். இது ஆபத்தான போக்காகும். 
ஆதார் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் சில விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. தனி மனிதர்களின் விவரங்களை தனியார் நிறுவனங்கள் திரட்டுவதன் மூலம், அவர்களின் ஒப்புதலின்றி அந்த தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 
ஆதார் அட்டை இல்லாததற்காக, சமூக நலத் திட்ட உதவிகளை வழங்க மறுப்பது, குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும்.
இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்திடம், குடிமக்களின் ஆதார் தகவல்களை பாதுகாப்பதற்கு முறையான கட்டமைப்பு இல்லை. எனினும், இந்தியாவில் ஆதார் அட்டையின்றி வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதுவே அரசமைப்புச் சட்டத்தை (விதி எண் 14)மீறுவதாகும். 
ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கும்போது, தகவல்களை பாதுகாக்க தவறுவது, உரிமைகளை மீறுவதாக இருக்கும் என்று நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com