சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புது தில்லி: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அறிய: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்: தீர்ப்பின் முக்கியம்சங்கள்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய, கோயில் தேவஸ்தானம் விதித்திருந்த கட்டுப்பாடு நீங்கியுள்ளது.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்தியன் யங் லாயர்ஸ் அசோசியேஷன் மற்றும் பல்வேறு தரப்பினர் மனுக்கள் தொடுத்திருந்தனர். இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிப்பது பாகுபாடு ஆகாதா? அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகாதா? என்பது உள்ளிட்ட 5 கேள்விகளை நீதிபதிகள் பதிவு செய்திருந்தனர். இந்த கேள்விகள் குறித்து அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்து, அரசியல் சாசன அமர்வுக்கு மனுக்களை நீதிபதிகள் பரிந்துரை செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ச்சியாக 8 நாள்கள் விசாரணை நடத்தியது. 

இதையடுத்து, மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி ஒத்திவைத்திருந்தனர். இதன்படி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதில் பெண்களை கடவுளாக மதிக்கும் நம் நாட்டில் அவர்களை பலவீனமாகக் கருதக் கூடாது என்றும், அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசின் சார்பில் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி அளிக்கப்பட்ட பதிலில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதை தாம் ஆதரிப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com