/

உயிரிழந்த வீரர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து கொடுக்காததற்கு மோடியே காரணம்: ராகுல் காந்தி

பணியின்போது உயிரிழக்கும் துணை ராணுவத்தினருக்கு தியாகிகள் அந்தஸ்து கொடுப்பதை பிரதமர் மோடியின் இறுமாப்பு குணமே தடுக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:38 am IST


பணியின்போது உயிரிழக்கும் துணை ராணுவத்தினருக்கு தியாகிகள் அந்தஸ்து கொடுப்பதை பிரதமர் மோடியின் இறுமாப்பு குணமே தடுக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
துணை ராணுவத்தினரின் ஊதிய உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், பணியின்போது உயிரிழக்கும் துணை ராணுவப் படை வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து அளிக்கப்படும் என்றார். இந்நிலையில், இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சிஆர்பிஎஃப் போன்ற துணை ராணுவப் படை வீரர்களின் தியாகத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். எனது கோரிக்கையை ஏற்பதற்கு பிரதமர் மோடியின் இறுமாப்பு குணம் அனுமதிக்காமல் இருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, துணை ராணுவத்தினரின் ஊதியத்தை அவர் உயர்த்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அந்தப் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தில்லியில் தேசிய போர் நினைவகம் திறப்பு விழா நடைபெறுவதையொட்டி கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு நினைவகம் அமைப்பது நல்ல விஷயம்தான். அதே நேரத்தில், அவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
காங். ஆளும் மாநில முதல்வர்களுக்கு உத்தரவு: இதனிடையே, வனப்பகுதிகளில் இருந்து பழங்குடியினர் மற்றும் வனவாசிகளை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர்களுக்கும், கர்நாடக மாநில துணை முதல்வருக்கும் ராகுல் காந்தி திங்கள்கிழமை கடிதம் எழுதினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.