பாஜக கூட்டணியில் உள்ள அúஸாம் கன பரிஷத் (ஏஜிபி) ஆகிய கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தை எழுப்பாது என வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
பாஜக, ஏஜிபி, போடோலாந்து மக்கள் முன்னணி, திரிபுரா தனித்துவ மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
இந்நிலையில், ஹிமந்த விஸ்வ சர்மா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை மேலும் வளர்ச்சிப்பாதையில் பயணிக்க வைக்க, நரேந்திர மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதே வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் நோக்கமாகும். பிரதமர் மோடி தலைமையிலான 5 ஆண்டு ஆட்சியின் சாதனைகளையும், அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் ஆட்சியின் சிறப்புகளையும் மக்களிடையே எடுத்துக்
கூறி பிரசாரத்தில் ஈடுபடுவோம்.
பாஜக, அúஸாம் கன பரிஷத் கட்சிகள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தைப் பிரசாரத்தின்போது எழுப்பாது. தேர்தலுக்குப் பிறகு, மசோதாவிலுள்ள சாதக, பாதகங்கள் குறித்து பொறுமையாக ஆலோசிக்கப்பட்டு, இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப்படும். கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக தேர்தல் அறிக்கைகளை வெளியிடாது. கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.