
நமது நாடு எதிர்கொண்டு வரும் பிரச்னைகளில் இருந்து நீங்கி, வளர்ச்சி பாதையில் செல்வதற்கு புதிய புத்தாக்க முயற்சிகள் மற்றும் தொழில்முனைவோர்களின் பங்களிப்பு அவசியம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள தேசிய புத்தாக்க நிறுவனத்தின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோர்களின் சாதனைகளை பாராட்டி, அவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கினார். அதையடுத்து அவர் பேசியதாவது:
புத்தாக்க எண்ணங்கள் கொண்ட சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் முயற்சியெடுக்க வேண்டும். நமது நாட்டின் லட்சியங்களை எட்டுவதற்கு இந்த புத்தாக்க முயற்சிகள் உறுதுணையாக இருக்கும். வெறும் புத்தாக்க எண்ணங்களைக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாது. அதை செயல்படுத்த வேண்டும். இளம் தொழில்முனைவோர்கள் உருவாக வேண்டும். புத்தாக்க முயற்சிகள் கொண்டவர்களே தொழில்முனைவோர்களாக உருவெடுக்கின்றனர். அதனால் அதற்கேற்ற சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
தேசிய புத்தாக்க நிறுவனம், பல இளம் தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது பாராட்டத்தக்கது என்று கூறினார்.