
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததன் எதிரொலியாக, அந்த பாலத்தை அகற்ற பிருஹண்மும்பை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தெற்கு மும்பையில் உள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டடத்தையும், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தையும் இணைக்கும் நடைமேம்பாலத்தின் பெரும்பகுதி வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில், 6 பேர் உயிரிழந்தனர். 31 பேர் காயமடைந்தனர். அதையடுத்து பிருஹண்மும்பை மாநகராட்சி ஆணையர் அஜோய் மேத்தா தலைமையில் வெள்ளிக்கிழமை காலை அவசர கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விபத்தின் காரணம் குறித்த விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையர் மேத்தா உத்தரவிட்டார். அந்த நடைமேம்பாலத்தை முழுவதுமாக அகற்றுமாறு மேத்தா உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நடைமேம்பாலம் முழுமையாக அகற்றப்பட்ட பின்பு, அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதியளிக்கப்படும்.
பாலங்களின் உறுதித்தன்மை குறித்து கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்த நடைமேம்பாலம் உறுதியாக உள்ளதாகவும், சிறிய சீரமைப்பு பணிதான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அதையடுத்து, அந்த பணி ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்பட்டு, பாலம் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், நடைமேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததால், நடைமேம்பாலம் சீரமைக்கப்பட்டதில் தவறா அல்லது ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளின் தவறா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
முன்னதாக, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், விபத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் மேத்தாவிடம் உத்தரவிட்டார்.
இடைநீக்கம்: இதனிடையே, பணியில் கவனக்குறைவாக இருந்த காரணத்துக்காக, அரசு கட்டுமானப் பொறியாளர்கள் 2 பேரை பிருஹன் மும்பை நகராட்சி ஆணையர் அஜோய் மேத்தா இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.