மசூத் அஸாருக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் இந்தியா தோல்வியா?: சுஷ்மா விளக்கம்

ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாருக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் இந்தியா தோல்வியடைந்து விட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
மசூத் அஸாருக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் இந்தியா தோல்வியா?: சுஷ்மா விளக்கம்
Published on
Updated on
1 min read


ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாருக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் இந்தியா தோல்வியடைந்து விட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த கோரிக்கையை, சீனா தடுத்து விட்டது.
இதையடுத்து, வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பலவீனமாக உள்ளார்; சீன அதிபர் ஷி ஜின்பிங்கைக் கண்டு அவர் அச்சமடைந்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
ஐ.நா. தடை விதிப்புக் குழுவில் மசூத் அஸாருக்கு தடை விதிக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்து சில உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். மசூத் அஸாருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்தியா இதுவரை நான்கு முறை கோரிக்கையை முன்வைத்தது. கடந்த 2009-ஆம் ஆண்டில்,  முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, இந்தியா மட்டுமே அந்த கோரிக்கையை வலியுறுத்தியது. கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்தியாவுடன் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளும் அந்த கோரிக்கையை முன்வைத்தன. 2017-ஆம் ஆண்டில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அந்த கோரிக்கையை முன்மொழிந்தன.
இந்நிலையில், 2019-ஆம் ஆண்டில், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை முன்வைத்த கோரிக்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தமுள்ள 15 நாடுகளில் 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினரல்லாத ஆஸ்திரேலியா, வங்கதேசம், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளும் அந்த கோரிக்கையை முன்மொழிந்தன.
மசூத் அஸாருக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் சர்வதேச நாடுகளின் ஆதரவை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டில் தனியாக இருந்த இந்தியாவுக்கு 2019-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது. வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் இந்தியா தோல்வியடைந்து விட்டதாகக் கூறும் எதிர்க்கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இந்த தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று அந்தப் பதிவில் சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com