மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடவுள்ளதாக, பீம் ஆர்மி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராக பலமான வேட்பாளரை களமிறக்குவதற்கான தேவையுள்ள இடங்களிலும் பீம் ஆர்மி போட்டியிடும் என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் மஞ்சீத் நெளதியால் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித்துகளுக்கு ஆதரவான இயக்கமாக பீம் ஆர்மி செயல்பட்டு வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமின் 85-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சந்திரசேகர் ஆசாத் பேசியதாவது:
வாராணசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன். அரசமைப்புச் சட்டத்தையும், தலித்துகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு இது அவசியமானது.
எனக்கு எம்.பி.யாக வேண்டும் என்றோ, எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென்றோ தனிப்பட்ட முறையில் ஆசை கிடையாது. அப்படி இருந்திருந்தால் தனித் தொகுதியை நான் தேர்வு செய்திருப்பேன்.
வாராணசி தொகுதியில் நாங்கள் போட்டியிடவிரும்புவது குறித்து மோடிக்கு தெரிய வந்த பிறகு, கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களை அவர் கழுவத் தொடங்கினார். வாராணசி தொகுதியில் மோடி வெற்றி பெற முடியாது என்பதை உறுதி செய்வோம் என்றார்.
பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதன் மூலமாக அரசமைப்புச் சட்டத்தின் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
எனினும், பிரதமர் மோடி எங்கு போட்டியிடுகிறார் என்பதை பாஜக இதுவரை அதிகாரபூர்வ மாக அறிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.