
கால்நடை தீவன ஊழல் தொடர்பான 3 வழக்குகளில் ஜாமீன் கோரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் தாக்கல் செய்துள்ள மனு குறித்து சிபிஐ பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத்துக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் இருந்தபோது, லாலுவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் இப்போது ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, வயது மூப்பு மற்றும் உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கால்நடை தீவன ஊழல் தொடர்பான 3 வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் லாலு பிரசாத் தாக்கல் செய்த மனுவை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து இந்த வழக்குகளில் ஜாமீன் வழங்குமாறு உச்சநீதிமன்றத்தை லாலு பிரசாத் நாடினார். அந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒருங்கிணைந்த பிகார் மாநிலத்தில் கடந்த 1990- களில் லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்திட்டத்தின் பெயரில் ஜார்க்கண்டில் உள்ள தேவ்கர், தும்கா, சாய்பாசா, தோரண்டா ஆகிய மாவட்ட அரசு கருவூலங்களில் இருந்து கோடிக்கணக்கான பணம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக, லாலு பிரசாத் மீது 5 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.
தேவ்கர், தும்கா, சாய்பாசா ஆகிய மாவட்ட கருவூலங்களில் பணம் மோசடி செய்த வழக்குகளில் லாலு பிரசாத் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டார். தற்போது தோரண்டா கருவூல மோசடி தொடர்பான வழக்கு விசாரணையை அவர் எதிர்கொண்டு வருகிறார். சாய்பாசா கருவூலம் தொடர்பான இரு வழக்குகளில், ஒன்றில் லாலுவுக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.