
பிகார் மாநிலம் பாட்னாவில், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ராம் கிருபால் யாதவ் இ-ரிக்ஷா ஓட்டிச் சென்றதைக் கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர்.
பாட்னாவில் காந்தி மைதானத்தையொட்டிய சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ராம் கிருபால் யாதவ் இ-ரிக்ஷா ஒன்றை ஓட்டி வந்தார். சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையே அவர் லாவகமாக இ-ரிக்ஷாவை ஓட்டியதைக் கண்டு, பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். சில இளைஞர்கள் அந்த காட்சியை தங்கள் செல்லிடப்பேசியில் படம் பிடித்தனர். காந்தி மைதானத்தைச் சுற்றி, சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு அவர் இ-ரிக்ஷாவை ஓட்டினார். அவருடன் அந்த ரிக்ஷாவின் ஓட்டுநரும் உடன் இருந்தார்.
இதுதொடர்பாக ராம் கிருபால் யாதவ் கூறியதாவது:
காந்தி மைதானத்துக்கு நான் தினமும் காலையில் நடைப் பயிற்சிக்காக வருவேன். கடந்த 30 ஆண்டுகளாக இந்த வழக்கத்தை கொண்டுள்ளேன். உடற்பயிற்சி மட்டுமன்றி மக்களின் பிரச்னைகளை நேரடியாக அறிந்துகொள்ளவும் இது வாய்ப்பாக உள்ளது. இன்று காலையில் காந்தி மைதானத்துக்கு புறப்பட்ட என்னிடம் இ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் பேசினார். தன்னுடன் ரிக்ஷாவில் வந்து, கௌரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். எனக்கு இ-ரிக்ஷா ஓட்டத் தெரியும் என்பதால், அவரை அருகில் அமர வைத்துவிட்டு, நானே ஓட்டினேன் என்றார் கிருபால் யாதவ்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாதுக்கு நெருக்கமானவராக இருந்த ராம் கிருபால் யாதவ், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். பின்னர், பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அந்த தொகுதியில் மீண்டும் களமிறங்கும் ராம் கிருபால் யாதவை எதிர்த்து, லாலுவின் மகள் மிஸா பாரதி போட்டியிடுகிறார். கடந்த முறை ராம் கிருபாலிடம் மிஸா பாரதி தோல்வி கண்டிருந்தார்.